கோவை: தமிழ்நாட்டில் பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் அளிக்க முன் வருவதில்லை. விவரங்கள் வெளியில் வருவதால் பெண்கள் மிரட்டப்படுகிறார்கள். தமிழ்நாட்டில் இருப்பது இன்சென்சிவிட்டி போலிஸ், இன்சென்சிட்டிவ் அரசாங்கம் என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் சாடினார்.
கோவை சிவானந்தா காலனி அடுத்த ஹோஸ்மின் நகரில் கோவை மக்கள் சேவை மையம் சார்பாக 50 ஏழை எளிய பெண்களுக்கு இலவச தையல் இயந்திரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன்,"தமிழகம் ஒரு பாதுகாப்பான மாநிலம். பெண்களுக்கு கல்வி வேலை வாய்ப்பு ஆகியவற்றில் சிறந்த இடத்தை கொடுக்கின்ற மாநிலமாக இருக்கின்ற பெயர் தமிழகத்திற்கு எப்பொழுதும் உண்டு. அதிகமாக உயர்கல்வி கற்கக்கூடிய பெண்கள் அதிகமாக வேலைக்கு செல்கின்ற பெண்கள் என பெண்களுக்கு உயர்ந்த ஸ்தானத்தை அளிக்கின்ற மாநிலம். அதே நேரத்தில் திமுக அரசின் கீழ் ஒவ்வொரு நாளும் நடைபெறுகின்ற கிரிமினல் சம்பவங்கள் அதிர்ச்சியை உருவாக்குவதாக உள்ளது.
கல்வி நிலையங்கள், அலுவலகங்கள் ,பொது போக்குவரத்து பகுதிகளில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நடைபெறுகின்ற பொழுது மாநில அரசு பெண்களின் பாதுகாப்பில் கவலைப்படுகிறதா? என்ற கேள்வி எழுகிறது. அண்ணா பல்கலைக்கழக விவகாரம் அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. கைது செய்யப்பட்ட நபர் திமுக நிர்வாகி், அவர் துணை முதல்வரை சந்திக்க கூடிய அளவிற்கு முக்கியமான பொறுப்பை திமுகவில் வகிக்கிறார்.