திருச்சி: திருச்சி மாவட்டம் துறையூரில் சுமார் 25க்கும் மேற்பட்ட அங்கன்வாடி மையங்கள், குழந்தைகள் காப்பகம், அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் இயங்கி வருகிறது. இங்கு தினசரி மதிய உணவிற்காக தமிழக அரசு சார்பில் லட்சக்கணக்கான முட்டைகள் இலவசமாக குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், துறையூரிலிருந்து திருச்சி செல்லும் சாலையில் வங்கிகளின் அருகில் உள்ள பிரபல தனியார் உணவகம் தேநீர் கடையுடன் இயங்கி வருகிறது. இந்த நிலையில், அந்த உணவகத்தில் தமிழக அரசின் முத்திரையிட்ட சத்துணவு முட்டைகள் தடையின்றி மிகக் குறைந்த விலையில் இரண்டு ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டு, பொதுமக்களிடம் 15 ரூபாய்க்கு மேல் ஆம்லேட் உள்பட பல்வேறு விதமான முட்டை உணவுகள் விற்கப்பட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது.
இதையும் படிங்க:உங்கள் உணவில் 'இது' இருக்கிறதா? ஆரோக்கிய வாழ்வுக்கு ICMR திட்டம் இதோ!
அது மட்டுமல்லாமல், இதனை கடைக்கு அருகில் உள்ள அங்கன்வாடி மையத்தில் இருந்து முட்டை, பாமாயில், அரிசி, பருப்பு உள்பட அனைத்து பொருட்களையும், அந்த தனியார் உணவகத்திற்கு தினந்தோறும் விற்பனை செய்து வருவதாக பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
எனவே, இது குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த நிலையில், துணை வட்டாட்சியர் மோகன் தலைமையில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சத்துணவு முட்டையை விற்பனை செய்த தனியார் உணவகத்திற்கு சீல் வைத்தனர். மேலும், 115 முட்டைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அது மட்டுமல்லாமல், ஹோட்டல் உரிமையாளரான ரத்னத்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.