தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

“தேர்தல் நேரத்தில் விஜய்யின் கூட்டணி வெளிப்பட்டுவிடும்” - இந்திய யூனியன் முஸ்லிம் லீக்! - MUSLIM LEAGUE ABOUT TVK VIJAY

முஸ்லிம் என்ற பெயர் தாங்கிய அமைப்புகளை அழைத்து தவெக பேச்சுவார்த்தை நடத்துவதால், ஓட்டு வங்கி மாறாது எனவும், விஜய்யின் கூட்டணி விரைவில் வெளிப்பட்டுவிடும் எனவும் முஸ்லிம் லீக் மாநில பொதுச்செயலாளர் முகமது அபூபக்கர் கூறியுள்ளார்.

முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலாளர் முகமது அபூபக்கர்
முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலாளர் முகமது அபூபக்கர் (ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 19, 2025, 11:00 AM IST

திருநெல்வேலி:இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இளைஞர் அணி மாநில செயற்குழு கூட்டம் நெல்லை வண்ணாரப்பேட்டையில் உள்ள தனியார் விடுதியில் நேற்று (பிப்.18) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் முகமது அபூபக்கர் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றினார்.

அதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “பாஜக ஆளும் மாநிலங்களில் பொது சிவல் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இது மக்களின் மத சுதந்திரத்திற்கு எதிரானது. இந்திய அரசியல் அமைப்பு அளித்துள்ள மத உரிமைகளை வழங்காமல் சிறுபான்மை சமுதாயத்தை அந்நியப்படுத்தும் செயலை பாஜக செய்கிறது.

“மதுவிலக்கும், வருவாய் இல்லாத நிலையும்”:

சட்டம் ஒழுங்கு விவகாரத்தில் அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அதிகமான வளர்ச்சி திட்டங்களை கவனம் செலுத்த வேண்டும். பூரண மதுவிலக்கு என்பதே முஸ்லீம் கொள்கை. படிப்படியாக மதுவிலக்கை அமல் படுத்துவோம் என்பதை தேர்தல் அறிக்கையில் திமுக சொல்லியிருந்தது. அரசியல் வருவாய் மிகவும் குறைந்துள்ளது. மத்திய அரசு தமிழகத்திற்கான நிதியைக் கொடுப்பதில்லை.

முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலாளர் முகமது அபூபக்கர் பேட்டி (ETV Bharat Tamil Nadu)

அதன் காரணமாக உடனடியாக பூரண மதுவிலக்கை அமல் படுத்துவதிலும், மதுக் கடைகளை திறப்பதிலும் பிரச்சினை எழுந்துள்ளது. அதிகமான தொழிற்சாலைகள் தமிழ்நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. வருவாய் அதிகரித்தால் படிப்படியாக மதுக் கடைகளை மூடுவார்கள் என்ற நம்பிக்கை இந்தியாவில் முஸ்லிம்களுக்கு உள்ளது.

தவெக-வை இயக்குவது யார்?:

தமிழக வெற்றிக் கழகம் யாரால் இயக்கப்படுகிறது என்பதை மக்கள் அறிவார்கள். அவர் கேட்காமலேயே பாஜகவால் அவருக்குப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. மக்களை சந்திப்பதற்கு விஜய் ரோட்டுக்கு வராமல் அவர்களை வீட்டுக்கு அழைத்துப் பேசுகிறார். ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம். ஆனால், மக்கள் அங்கீகரிக்க வேண்டியது தான் அவசியம்.

திமுக கூட்டணியில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொடரும். தமிழ்நாட்டில் ஐயூஎம்எல் கட்சிக்கு சாதகமான நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை, தென்காசி மாவட்டம் கடையநல்லூர் உள்ளிட்ட பதினைந்து தொகுதிகள் குறித்த பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. தேர்தலுக்கு காலம் உள்ளது. கூட்டணி குறித்து பேசி முடிவெடுக்கப்படும் என்றார்.

இதையும் படிங்க:விஜய் சிபிஎஸ்இ பள்ளி நடத்துகிறார்..எத்தனை பேருக்கு தெரியும்? - அண்ணாமலை கேள்வி!

“தவெகவிற்கு இங்கு ஓட்டு வங்கி கிடையாது” :

மேலும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி மட்டுமே இஸ்லாமிய மக்களால் அங்கீகரிக்கப்பட்ட அமைப்பு. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைமை எதை அறிவிக்கிறதோ அதனையே இஸ்லாமியச் சமுதாய பெருவாரியான மக்கள் ஏற்றுக் கொள்வார்கள். முஸ்லிம் பெயர் தாங்கிய அமைப்புகளை எல்லாம் அழைத்து தமிழக வெற்றிக் கழகம் பேச்சுவார்த்தை நடத்துவது பத்திரிகை செய்தியாக மட்டும் இருக்குமே தவிர, ஓட்டு வங்கியாக மாறுவதற்கான வாய்ப்பே கிடையாது.

“விஜய்யின் கூட்டணி வெளிப்பட்டுவிடும்”:

திமுகவுடன் இருப்பதற்கான காரணம் அவர்கள் கொள்கையில் உடன்பட்டு இருப்பதால்தான். இஸ்லாமியச் சமுதாயத்திற்கு உறுதுணையாக திமுக கட்சி மட்டுமே இருக்கிறது. மற்ற கட்சிகள் இல்லை. கூட்டணியை உடைப்பதற்கு என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். விஜய்யின் கூட்டணி காலப்போக்கில் தேர்தல் நேரத்தில் வெளிப்பட்டுவிடும்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் பாஜக மத நல்லிணக்கத்தை எடுக்க நினைக்கிறது. பாண்டிய மன்னர் உடல் நலம் பெற்றதால் வழங்கப்பட்டது. சிக்கந்தர் மலை, பாரம்பரியமிக்க மலையை வைத்து அரசியல் ஆதாயம் நினைத்தால் பாஜகவை மக்கள் புறக்கணிப்பார்கள்” எனத் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details