சென்னை: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த மழையால் தமிழ்நாடு முழுவதும் பரவலாக கோடை வெப்பம் தணிந்து, குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. இன்று (மே 20) வரை தமிழ்நாட்டில் கனமழை பெய்யும் என்று கூறியிருந்த வானிலை ஆய்வு மையம், ரெட் அலர்ட் எச்சரிக்கையும் விடுத்திருந்தது.
இந்நிலையில் இந்திய வானிலை மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், “வரும் 22ஆம் தேதி தென்மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது.
இது முதலில் வடகிழக்கு திசையில் நகர்ந்து மே 24ஆம் தேதி காலை மத்திய வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளது. இதனால் மே 24 மற்றும் 25 ஆம் தேதிகளில் வடக்கு ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தில் ஒரு சில இடங்களில் அதி கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மேலும் வரும் 23ஆம் தேதி காலை முதல் மத்திய வங்கக் கடலில் மணிக்கு 40-50 கி.மீ., வேகத்திலும் இடையிடையே 60 கி.மீ., வேகத்திலும் காற்று வீசக்கூடும்.