தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

புதுச்சேரி ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற இந்தியா கூட்டணியினர்! - புதுச்சேரி சிறுமி கொலை அப்டேட்

Puducherry bandh: புதுச்சேரியில் இந்தியா கூட்டணி சார்பில், ஆளுநர் மாளிகையை முற்றுகையிட பேரணியாகச் சென்ற கட்சியினருக்கும், போலீசாருக்கும் இடையே ஏற்பட்ட தள்ளுமுள்ளு காரணமாக பரபரப்பு ஏற்பட்டது.

Rally on behalf of India Alliance in Puducherry
புதுச்சேரியில் இந்தியா கூட்டணி சார்பில் பேரணி

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 8, 2024, 3:21 PM IST

புதுச்சேரியில் இந்தியா கூட்டணி சார்பில் பேரணி

புதுச்சேரி:புதுச்சேரியில் 9 வயதுசிறுமி கொலை செய்யப்பட்டதைக் கண்டித்தும், போதைப்பொருட்களை ஒழிப்பதை வலியுறுத்தியும், இந்தியா கூட்டணி சார்பில் இன்று (மார்ச் 8) பந்த் நடைபெற்று வருகிறது. இந்த பந்த் போராட்டம், காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதன் காரணமாக, புதுச்சேரி பேருந்து நிலையத்தில் இருந்து தனியார் பேருந்துகள் ஏதும் இயக்கப்படவில்லை. மேலும், புதுச்சேரி கடைகள் அனைத்தும் அடைப்பு என அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, திரையரங்குகளில் பகல் காட்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், பல தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், அரசுப் பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும் என்றும், தேர்வுகள் தடையின்றி நடக்கும் எனவும் கல்வித்துறை அறிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து, போராட்டத்தின்போது மாணவர்களுக்கு எந்த தொந்தரவும் அளிக்கப்படாது என போராட்டத்தை முன்னெடுத்துள்ள அரசியல் கட்சிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், கடலூரில் இருந்து வரும் தமிழக அரசுப் பேருந்துகள் முள்ளோடை எல்லை வரையிலும், கிழக்கு கடற்கரை சாலை வழியே வரும் பேருந்துகள் கோட்டக்குப்பம் வரையிலும், விழுப்புரத்தில் இருந்து வரும் பேருந்துகள் புதுச்சேரி எல்லை மதகடிப்பட்டு வரையிலும், திண்டிவனம் வழியாக வரும் பேருந்துகள் கோரிமேடு எல்லை வரையிலும் திருப்பி விடப்பட்டு வருகின்றன.

எதிர்கட்சிகள் ஒட்டுமொத்தமாக பந்த் போராட்டத்தை நடத்துவதை தொடர்ந்து, புதுச்சேரி முழுதும் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். புதுச்சேரியைப் போலவே, காரைக்காலிலும் இன்று பந்த் போராட்டம் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே புதுச்சேரியில் இந்தியா கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சித் தலைவர் வைத்திலிங்கம், முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, காங்கிரஸ் முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், திமுக சார்பில் மாநில அமைப்பாளர் சிவா மற்றும் கூட்டணி கட்சியினர், இன்று நடைபெற்று வரும் முழு அடைப்பு போராட்டத்தின் ஒரு பகுதியாக, ராஜா தியேட்டர் சிக்னலில் இருந்து பேரணியாகச் சென்றனர்.

இந்த பேரணியானது நேரு வீதி வழியாகச் சென்று, மிஷின் வீதி வழியாக வந்தபோது, அங்கு போலீசார் அவர்களைத் தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அங்கு சிறுமியின் படுகொலைக்கு நியாயம் கேட்டு முழக்கங்கள் எழுப்பப்பட்டன. அப்போது, பேரிகார்ட் தடுப்புகளை போட்டு, பேரணியில் ஈடுபட்ட நபர்களை போலீசார் தடுக்க முயன்ற நிலையில், கவர்னர் மாளிகையை நோக்கி முற்றுகையிட முற்பட்ட பேரணியினர், பேரிகார்டை தாண்ட முயற்சித்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, அவர்களைத் தடுக்க முயன்ற போலீசாருக்கும், கட்சியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்ட நிலையில், அவர்களை போலீசார் கைது செய்தனர். இதேபோல், அதிமுக சார்பில் மாநிலச் செயலாளர் அன்பழகன் தலைமையில், பழைய பேருந்து நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்ட நபர்களையும் போலீசார் கைது செய்தனர்.

இதையும் படிங்க:சிறுமி கொலை சம்பவத்தை கண்டித்து புதுவையில் எதிர்க்கட்சிகள் பந்த்.. சுற்றுலா பயணிகள் கடும் அவதி!

ABOUT THE AUTHOR

...view details