தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருச்சியில் இன்று விசிக மாநில மாநாடு: மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்பு! - திருமாவளவன்

VCK Trichy Meeting: விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் திருச்சி நடைபெற உள்ள 'வெல்லும் சனநாயகம்' மாநாட்டில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உட்பட 'இந்தியா' கூட்டணியில் உள்ள முக்கிய தலைவர்கள் பங்கேற்க உள்ள நிலையில், மாநாட்டு நடைபெறும் பகுதிகளில் பாதுகாப்பு பணிகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 26, 2024, 7:17 AM IST

திருச்சி: விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் 'வெல்லும் சனநாயகம்' எனும் மாநாடு இன்று (ஜன.26) திருச்சி அடுத்த சிறுகனூர் பகுதியில் நடைபெற உள்ளது. அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உட்பட இந்தியா (INDIA) கூட்டணியில் இருக்கும் 28 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்று உரையாற்ற உள்ளனர்.

இந்த மாநாட்டிற்காக திருச்சி அருகே உள்ள சிறுகனூரில் 50 ஏக்கர் பரப்பளவிலுள்ள நிலத்தில், 500 மீட்டர் அகலம், 1000 மீட்டர் நீளத்திற்கு மாநாடு திடல் அமைக்கப்பட்டுள்ளது. மாநாடு திடல் அருகே ஆயிரக்கணக்கான வாகனங்கள் நிறுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், மாநாட்டுத் திடலின் பின்புறம், முக்கிய தலைவர்கள், கட்சி நிர்வாகிகளுக்காக வாகன நிறுத்துமிடங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மாநாடு திடலின் பிரதான நுழைவு வாயில் முந்தைய நாடாளுமன்ற கட்டிட மாதிரி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த வாயில்களில் திருமாவளவன், அம்பேத்கர், பெரியார், மார்க்ஸ் ஆகியோருடன் புத்தர் புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளன. நுழைவு வாயிலைத் தொடர்ந்து உள்ளே நுழையும் தொண்டர்களை பிரம்மாண்ட வடிவில் அமைக்கப்பட்டுள்ள இந்திய அரசமைப்பின் முகவுரையும், அம்பேத்கரின் சிலையும் வரவேற்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், தலைவர்கள் உரையாற்றும் மேடை 80 அடி நீளத்திலும் 50 அடி உயரத்திலும் மேடை வடிவமைக்கப்பட்டுள்ளது. முன்னதாக மாநாடு நடைபெறும் இடத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் பாதுகாப்பு பிரிவு அதிகாரி திருநாவுக்கரசர், மத்திய மண்டல காவல் துறை தலைவர் கார்த்திகேயன், ஆகியோர் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு மேற்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து, மாநாட்டு பணிகளை விடுதலை சிறுத்தை கட்சியின் பொதுச் செயலாளரும், விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவிக்குமார் மற்றும் விசிக தலைவர் திருமாவளவனின் தனிசெயலாளர் தயாளன் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த நிகழ்ச்சிக்கு தமிழக முதலமைச்சர் உட்பட நாட்டின் முக்கிய அரசியல் தலைவர்கள் வருகை தர உள்ள நிலையில், பாதுகாப்பு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், மாநாடு நடைபெறும் பகுதியில் எந்த விதமான ஒரு அசம்பாவித சம்பவங்களும் ஏற்படக்கூடாது என காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.

மேலும், போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்கும் வகையில், திருச்சி மாவட்டத்திற்குள் வரும் அனைத்து வாகனங்களும், திருச்சி மாநகரிலிருந்து சென்னையை நோக்கிச் செல்லும் அனைத்து வாகனங்கள் மாற்றுப் பாதையில் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, பாதுகாப்பு கருதி திருச்சி மாவட்டத்தில் இரண்டு நாட்களுக்கு ட்ரோன் கேமரா பறக்க தடை விதித்து, மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க:மீண்டும் பாஜகவில் இணைந்த ஜெகதீஷ் ஷெட்டர்! என்ன காரணம்?

ABOUT THE AUTHOR

...view details