திருநெல்வேலி: நாடு முழுவதும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஜூன் 1 வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. குறிப்பாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19 தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில், தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்துத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது.
இந்த நிலையில், வருமான வரித்துறை அதிகாரிகள் கட்டுப்பாட்டு அறை ஒன்று தொடங்கி தேர்தல் தொடர்பாக பணப்பட்டுவாடா ஏதாவது நடைபெறுகிறதா? என தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கட்டுக்கட்டாக பணம் பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், கடந்த சில நாட்களாக வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி பணத்தை பறிமுதல் செய்து வருகின்றனர்.
குறிப்பாக சென்னை, திருநெல்வேலி, ஈரோடு, சேலம், கோயம்புத்தூர் உள்ளிட்ட 44 மாவட்டங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் திருநெல்வேலி மாவட்டம் விஜயநாராயணம் பகுதியைச் சேர்ந்த அரசு ஒப்பந்ததாரர் ஆர்.எஸ். முருகன் வீடு மற்றும் அலுவலகத்தில், இரண்டாவது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
திருநெல்வேலி மாவட்டம் விஜயநாராயணம் பகுதியை சார்ந்தவர் ஆர்.எஸ்.முருகன். அரசு ஒப்பந்ததாரரான இவருக்கு திருநெல்வேலி என்.ஜி.ஓ. காலனி பகுதியில் வீடும், பெருமாள்புரம் 80 அடி சாலையில் அலுவலகமும் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், வருமான வரித்துறை உதவி ஆணையாளர் ராஜேந்திரன் தலைமையிலான ஏழு பேர் கொண்டு குழுவினர் அவரது வீட்டில் தீவிர சோதனை செய்தனர்.