சேலம்:வருகின்ற 19ஆம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில், 85 வயதிற்கு மேற்பட்டோர், மாற்றுத் திறனாளிகள் ஆகியோரிடம் அவர்களது வீட்டிற்கே சென்று வாக்கு சேகரிக்கும் பணிகள் தமிழகம் முழுவதும் நேற்று (ஏப்ரல் 04) தொடங்கியது.
அதன் ஒரு பகுதியாகச் சேலம் மாவட்டத்தில் இப்பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அதனைச் சேலம் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான பிருந்தா தேவி நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
இது தொடர்பாக மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் ஆட்சியர் பிருந்தா தேவி கூறுகையில், "நாடாளுமன்றத் தேர்தல் வருகின்ற 19ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த வாக்காளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வீட்டிலிருந்து வாக்களிக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்காக வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் நியமிக்கப்பட்டு 12டி விண்ணப்பப் படிவத்துடன் தொடர்புடையவர்களின் வீட்டிற்கே நேரில் சென்று விண்ணப்பங்களை வழங்கப்பட்டது. மேலும், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் கடந்த 24ஆம் தேதி வரை பெறப்பட்டது.
இதனைத் தொடர்ந்து பெறப்பட்ட விண்ணப்பங்களின்படி வாக்காளர்களின் வாக்குகளை அவர்களது வீட்டிற்கே சென்று வாக்குப் பதிவு செய்யப்பட்டு வருகிறது. 85 வயது மேற்பட்டவர்களில் 3,262 வாக்காளர்களும், 1918 மாற்றுத் திறனாளி வாக்காளர்களும் என மொத்தம் 5180 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.
மேலும், தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் தங்கள் வாக்கினைப் பதிவு செய்யத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது" என மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி தெரிவித்தார்.
இதையும் படிங்க:தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை அறிவிப்பு! - Summer Holiday For School Students