சென்னை:கரோனா காலத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்ட செவிலியர்களை பணி நீக்கம் செய்து, தமிழ்நாடு அரசு கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் 30ஆம் தேதி அரசாணை பிறப்பித்தது. இதை எதிர்த்து, 977 செவிலியர்கள் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, செவிலியர்களின் கோரிக்கையை பரிசீலிக்க உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து, தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, கரோனா காலத்தில் நியமிக்கப்பட்ட 977 ஒப்பந்த செவிலியர்களை முன்னுரிமை அடிப்படையில் காலியிடங்களில் நியமிப்பது தொடர்பாக அரசு பரிசீலித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது.
977 ஒப்பந்த செவிலியர்களை தகுதியின் அடிப்படையில் நியமிக்கப்படுவார்கள் என்றும், அதன்பிறகு உருவாகும் காலியிடங்களில் படிப்படியாக நியமிக்கப்படுவர் என்றும் அரசுத் தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது. தற்போது இந்த உத்தரவாதத்தை மீறி, தமிழ்நாடு மருத்துவம் மற்றும் ஊரகப் பணிகள் இயக்குநர் உள்ளிட்ட அதிகாரிகள், தகுதியான செவிலியர்களுக்கு பணி நியமனம் வழங்காமல், தகுதியில்லாத 963 செவிலியர்களிடம் இருந்து பணம் பெற்றுக் கொண்டு குறுக்கு வழியில் அவர்களை பணியமர்த்தி உள்ளதாக, நமக்கு நாமே செவிலியர்கள் மேம்பாட்டுச் சங்கத்தின் தலைவர் செந்தில்நாதன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அந்த மனுவில், இந்த முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், அரசியல் பிரமுகர்கள் பலர் சம்பந்தப்பட்டுள்ளதால், தனது புகார் முடித்து வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிப்பதால், மருத்துவம் மற்றும் ஊரகப் பணிகள் இயக்குநர் உள்ளிட்ட அதிகாரிகள் மீது துறை ரீதியாகவும், குற்றவியல் ரீதியாகவும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கேட்டுக் கொண்டுள்ளார். இந்த மனு வரும் திங்கட்கிழமை (மார்ச் 18) விசாரணை வர உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:இப்தார் நோன்பு திறப்பின்போது வாக்கு சேகரிக்க கூடாது.. தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி!