சென்னை:வங்கக் கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக ஃபெங்கல் புயலாக (Cyclone Fengal) வலுப்பெறும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தற்போது உருவாகியுள்ள இந்த ஃபெங்கல் புயல் சென்னைக்கு தெற்கு தென் கிழக்கு திசையில் சுமார் 670 கிலோ மீட்டர் தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளது.
மேலும், சென்னையில் இருந்து சுமார் 800 கிலோமீட்டர் தொலைவில் நகர்ந்து வரும் நிலையில், காசிமேடு மற்றும் அதனை ஒட்டியுள்ள கடற்கரை பகுதியில் கடல் ஆக்ரோஷமாக காணப்படுகிறது. அதாவது, 10 கிலோமீட்டர் வேகத்தில் புயல் நகர்வதால், சுமார் 55 முதல் 65 கிலோமீட்டர் வரை காற்றின் வேகம் இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் காசிமேடு, திருவெற்றியூர் குப்பம், எண்ணூர் ஆகிய பகுதிகளில் கடல் சீற்றமாகக் காணப்படுகிறது.
ஏற்கனவே, வானிலை ஆய்வு மையம் தரப்பிலிருந்து கடல் காற்று 60 கிலோமீட்டரில் இருந்து 80 கிலோ மீட்டர் வரை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மெரினா மற்றும் பட்டினப்பாக்கம் கடலில் காற்றின் வேகம் மிக அதிகமாக உள்ளதாகவும், நடந்து செல்லும் பொதுமக்களைக் கீழே தள்ளும் அளவிற்கு காற்றின் வேகம் அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
சென்னை மெரினா மற்றும் பட்டினப்பாக்கம் கடலில் கடல் அலை 3 அடி மேல் உயர்ந்து ஆக்ரோஷத்துடன் உள்ளது. இதனால் மீனவர்கள் தங்களது படகுகளை கடல் மணல் பரப்பில் 50 அடி தூரம் வரை பாதுகாப்பான இடத்திற்கு தள்ளி வைத்துள்ளனர். மேலும், தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களிலும், கன முதல் மிக கனமழை பெய்து வருகிறது.