தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோடை ஸ்பெஷல் விமானங்கள்: சென்னையில் இருந்து முக்கிய நகரங்களுக்கு விமான சேவை..பயணிகள் மகிழ்ச்சி - Chennai Airport - CHENNAI AIRPORT

Summer special flights in Chennai Airport: சென்னை விமான நிலையத்தில் இருந்து கோடை ஸ்பெஷலாக தூத்துக்குடி, திருச்சி, மதுரை, கோவை, பெங்களூர், ஹைதராபாத் மற்றும் மும்பை, டெல்லி, கொல்கத்தா உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு 40-க்கும் மேற்பட்ட விமானங்கள் சேவை அதிகரிக்கப்பட்டுள்ளது.

Summer special flights in Chennai Airport
சென்னை விமான நிலையம் (Image Credits to ETV Bharat Tamil Nadu (File photo))

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 5, 2024, 9:10 AM IST

சென்னை:தமிழ்நாட்டில் கோடை விடுமுறை தொடங்கி விட்டதால், வெளியூர் செல்லும் பயணிகள் கூட்டம் அதிகரிப்பு காரணமாக, சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடி, திருச்சி, மதுரை, கோவை, பெங்களூர், ஹைதராபாத் மற்றும் மும்பை, டெல்லி, கொல்கத்தா உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கும் சுமார்,40 -க்கும் மேற்பட்ட விமானங்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு முடிந்துவிட்டது. அதைபோல் பள்ளிகள், கல்லூரிகளுக்கு தேர்வுகள் முடிந்து விடுமுறையும் விடப்பட்டுள்ளது. மேலும், கடுமையான கோடை வெயில் வாட்டி வதைப்பதால், பொதுமக்களில் பலர், குழந்தைகளுடன் வெளியூர் சுற்றுலாக்கள் மற்றும் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இதனால், சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் பயணிகளின் எண்ணிக்கை, வழக்கத்தை விட அதிகமாக உள்ளது.

ஒவ்வொரு ஆண்டு கோடை விடுமுறையின் போதும், இதைபோல் பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பதும், பயணிகள் வசதிக்காக கூடுதல் விமான சேவைகள் இயக்குவதும் வழக்கமாக உள்ளது. அதைபோல், இந்த ஆண்டு கோடை விடுமுறையை, பயணிகள் சந்தோஷமாக கழிப்பதற்காக சென்னை விமான நிலையத்தில், கோடைகால விமான போக்குவரத்து கால அட்டவணை செயல்பட தொடங்கியுள்ளது.

சென்னை - தூத்துக்குடிக்கு, இதுவரை 3 புறப்பாடு விமானங்கள், 3 வருகை விமானங்கள், 6 விமானங்கள் இயக்கப்பட்டு வந்தன. இப்போது 4 புறப்பாடு, 4 வருகை என்று 8 விமானங்கள் இயக்கப்படுகின்றன. அதைபோல் திருச்சிக்கு இதுவரை, 4 புறப்பாடு, 4 வருகை, 8 விமானங்கள் மட்டும் இயக்கப்பட்டு வந்த நிலையில், இப்போது 6 புறப்பாடு, 6 வருகை என்று 12 விமானங்கள் நாளொன்றுக்கு இயக்கப்படுகின்றன.

கோவைக்கு இதுவரை தினமும் 6 புறப்பாடு,6 வருகை விமானங்கள், 12 விமானங்கள் இயக்கப்பட்டு வந்தன. இப்போது 8 புறப்பாடு விமானங்கள், 8 வருகை விமானங்கள், 16 விமானங்கள் இயக்கப்படுகின்றன. மதுரைக்கு இதுவரையில் 5 புறப்பாடு விமானங்கள், 5 வருகை விமானங்கள் 10 விமானங்கள் இயக்கப்பட்டு வந்தன. ஆனால், இப்போது 7 புறப்பாடு விமானங்கள், 7 வருகை விமானங்கள், 14 விமானங்கள் இயக்கப்படுகின்றன.

அதைபோல், அண்டை மாநிலங்களான பெங்களூருக்கு இதுவரையில் நாள் ஒன்றுக்கு, 8 புறப்பாடு விமானங்கள், 8 வருகை விமானங்கள், 16 விமானங்கள் இயக்கப்பட்டன. இப்போது 11 புறப்பாடு விமானங்கள்,, 11 வருகை விமானங்கள் 22 விமானங்கள் இயக்கப்படுகின்றன. ஹைதராபாத்துக்கு இதுவரை 10 புறப்படு விமானங்கள், 10 வருகை விமானங்கள் 20 விமானங்கள் இயக்கப்பட்டு வந்தன. ஆனால் இப்போது, 14 புறப்பாடு விமானங்கள், 14 வருகை விமானங்கள், 28 விமானங்கள் இயக்கப்படுகின்றன.

இதைபோல் டெல்லி, மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட பெரு நகரங்களுக்கும், கூடுதல் விமான சேவைகள் இயக்கப்படுகின்றன. மேலும் சென்னை - துர்காப்பூர் இடையே, புதிதாக வாரத்தில் 3 நாட்கள், நேரடி விமான சேவைகள், வரும் மே 16 ஆம் தேதி முதல் தொடங்கப்படுகின்றன. அதைபோல் சென்னை - பாரீஸ் - சென்னை இடையே, ஏர் பிரான்ஸ் விமான நிறுவனம், இதுவரையில் வாரத்திற்கு 3 நாட்கள், விமான சேவைகளை இயக்கி வந்தது.

ஆனால் இந்த கோடை விடுமுறையில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருப்பதால், இனிமேல் வாரத்திற்கு 5 நாட்கள், இந்த விமான சேவை நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதைப்போல், சென்னையில் இருந்து, தாய்லாந்து நாட்டு தலைநகர் பாங்காக்குக்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், மே 15ஆம் தேதியில் இருந்து, நேரடி விமான சேவையை தொடங்க இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதைபோல், சிறந்த சுற்றுலா தளமான மொரிசியஸ் தீவுக்கு கடந்த நான்கு ஆண்டுகளாக நிறுத்தப்பட்டு இருந்த ஏர் மொரிசியஸ் பயணிகள் விமானம், கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து மீண்டும் ஓடத் தொடங்கியுள்ளன.

இவைகள் தவிர சிங்கப்பூர், மலேசியா, லண்டன் உள்ளிட்ட சுற்றுலா தளங்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கு செல்லும் விமானங்களில் பயணிகள் கூட்டம் நிறைந்து வழிகிறது. இதைபோல், இந்த கோடை ஸ்பெஷல் விமானங்களாக, சென்னை விமான நிலையத்தில் மொத்தம் சுமார் 40-க்கும் மேற்பட்ட கூடுதல் மற்றும் புதிய விமான சேவைகள் இயக்கப்படுகின்றன. இந்த தகவல், கோடை வெப்பத்தில் சிக்கித் தவிக்கும் பயணிகளுக்கு, குளுமையை ஏற்படுத்தி உள்ளது.

மேலும், சென்னை விமான நிலையத்தில், கடந்த 2023 ஆம் ஆண்டு மே மாதத்தில், பயணித்த பயணிகளின் எண்ணிக்கை 18,90,638. ஆனால், கடந்த 2022 ஆம் ஆண்டு மே மாதம், பயணித்த பயணிகளின் எண்ணிக்கை 17,42,607. சுமார் ஒன்றரை லட்சம் பயணிகள், கடந்த 2022ஆம் ஆண்டை விட, 2023ஆம் ஆண்டில் அதிகரித்துள்ளது. ஆனால், இந்த 2024ஆம் ஆண்டு மே மாதத்தில் மட்டும் பயணிகளின் எண்ணிக்கை சுமார் 3 லட்சம் வரை அதிகரித்து, இந்த ஆண்டு மே மாதத்தில், சுமார் 21 லட்சம் பயணிகள் பயணிக்க வாய்ப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கின்றனர்.

அதேபோல், கடந்த 2022 ஆம் ஆண்டு மே மாதம், சென்னை விமான நிலையத்தில் இயக்கப்பட்ட விமானங்களின் எண்ணிக்கை 11,405. ஆனால், 2023 ஆம் ஆண்டு மே மாதம் இயக்கப்பட்ட விமானங்களின் எண்ணிக்கை 11,708. விமானங்களில் எண்ணிக்கை கடந்த 2022ஆம் ஆண்டை விட 2023 ஆம் ஆண்டு மே மாதம் 303 விமானங்கள் அதிகமாக இயக்கப்பட்டுள்ளன. ஆனால், இந்த ஆண்டு மே மாதம் சுமார் 400 விமானங்கள் வரை அதிகமாக இயக்குவதற்கு வாய்ப்புகள் உள்ளது என்று கூறப்படுகிறது.

இதனால், கோடை விடுமுறையை மகிழ்ச்சியுடன் கழிக்க, வெளியூர் செல்லும் பயணிகள் இடையே, உற்சாகம் ஏற்பட்டு உள்ளது. அதோடு, கூடுதல் விமானங்கள் அதிகமாக இயக்கப்படுவதால், விமானங்களில் இட நெருக்கடியும் ஏற்படவில்லை. அதைபோல், அதிக அளவில், கூடுதல் கட்டணங்களும் வசூலிக்கப்படவில்லை. இது பயணிகள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க:தரையிறங்கும் விமானம் மீது லேசர் லைட்: இந்தியா விமான நிலைய ஆணையம் கொடுத்த வார்னிங்! - Pointing Lasers At Aircrafts

ABOUT THE AUTHOR

...view details