சென்னை:தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்துள்ளதாகவும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் உள் மாவட்டம் மற்றும் கடலோர மாவட்டங்களில் குறைந்தபட்சம் 1 செ.மீ முதல் அதிகபட்சம் 10 செ.மீ வரை மழை பெய்துள்ளது.
அதே போல் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாகத் திருச்சி விமான நிலையத்தில் 38.3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், குறைந்த பட்சமாக ஈரோட்டில் 19.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மழை எச்சரிக்கை:தென்னிந்தியப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் இன்று (திங்கள்கிழமை) கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், சேலம், நாமக்கல் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.
நாளை (செவ்வாய்க்கிழமை):கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, திண்டுக்கல், திருப்பூர், நீலகிரி, ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.