சென்னை: இசைஞானி இளையராஜாவின் மகளும், பின்னணி பாடகியுமான பவதாரிணி (47) உடல்நலக் குறைவு காரணமாக இலங்கையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று (ஜன.25) உயிரிழந்தார்.
பிரபல பின்னணி பாடகி பவதாரிணி கடந்த 2000 ஆம் ஆண்டில் பாரதி திரைப்படத்தில் ‘மயில் போல பொண்ணு ஒண்ணு’ என்ற பாடலுக்காக தேசிய விருது வாங்கியிருந்தார். மேலும் பிரண்ட்ஸ், தாமிரபரணி, காதலுக்கு மரியாதை, மங்காத்தா, கோவா, அனேகன் ஆகிய பல படங்களில் பாடியுள்ளார்.
இவர் பாடிய பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவையாகும். குறிப்பாக அழகி படத்தில் இவர் பாடிய 'ஒளியிலே தெரிவது தேவதையா' என்ற பாடல் மாபெரும் ஹிட் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது மறைவு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.