திருவண்ணாமலை: ஃபெஞ்சல் புயல் காரணமாக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கனமழையானது வெளுத்து வாங்கியது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலின் பின்புறம் உள்ள மலையின் அடிவாரப் பகுதியில் கனமழை காரணமாக ஞாயிற்றுக்கிழமை மண்சரிவு ஏற்பட்டது.
இதில் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் பின்புறமாக 11வது வஉசி நகரில் மலையில் இருந்து உருண்டு வந்த பாறைகள் விழுந்ததில் ராஜ்குமார் என்பவர் வீடு மண்ணில் புதைந்தது. இதில் ராஜ்குமார் அவரது மனைவி மீனா, (26) மகன் கௌதம், (9) மகள் இனியா (7) மற்றும் அண்டை வீட்டை சேர்ந்த சிறுமிகள் மகா (12), வினோதினி (14) , ரம்யா (12) என மொத்தம் 7 பேர் நேற்று முன்தினம் (டிச.1) புதையுண்டனர்.
பேராசிரியர் மோகன் பேட்டி (Credits- ETV Bharat Tamil Nadu) மழை குறுக்கிட்ட போதிலும் 18 மணி நேரத்திற்கும் மேலாக மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தன. இந்த நிலையில் நேற்றிரவு மண்ணில் புதையுண்டவர்களில் 7 பேர் சடலமாக மீட்கப்பட்டனர்.
இந்நிலையில், ஐஐடி பேராசிரியர்கள் நரசிம்ம ராவ், மோகன், பூமிநாதன், ஆகாஷ் ஆகியோர் சம்பவ இடத்தில் குறிப்பாக நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் இன்று ஆய்வு மேற்கொண்டனர்.
இதையும் படிங்க:"தி.மலை மண்சரிவில் உயிரிழந்தோரின் உறவினர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்" - தவெக தலைவர் விஜய் உருக்கம்!
இதையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஓய்வுபெற்ற ஐஐடி பேராசிரியர் மோகன் கூறுகையில், “அதிக மழை பெய்யும்போது மலையில் இருந்து அதிக வேகத்துடன் தண்ணீர் வருவதால் நில அரிப்பு ஏற்பட்டு இதுபோன்ற நிலச்சரிவுகள் ஏற்படுகின்றன. இதுபோன்ற மலைச்சரிவுகளில் வீடுகள் கட்டி குடியிருப்பது ஆபத்தான ஒன்றாகும். இதுபோன்ற இடங்களில் வீடு கட்டும்போது பாதுகாப்பு தன்மையை உறுதிப்படுத்திக் கொண்டு, பின் வீடு கட்ட வேண்டும்” என்றார்.
மேலும் பேசிய அவர், “இதுபோன்ற அசம்பாவித சம்பவங்கள் நிகழும்போது எந்த விதமான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என ஆய்வு செய்து தமிழக அரசுக்கு ஆய்வறிக்கை சமர்பிக்க உள்ளோம்.
மலையில் இருந்து அதிவேகத்தில் அதிகளவு தண்ணீர் வரும்போது ஈர்ப்பு விசை அதிகமாக இருக்கும். அப்போது ஒரு பாறை சரிய ஆரம்பித்தால் அனைத்து பாறைகளும் சரிய தொடங்கும். ஏற்கெனவே இது சம்பந்தமாக தரக்கூடிய அறிக்கையில் உங்களுடைய அனைத்து கேள்விகளுக்கும் விடை இருக்கும். இந்த மழையின் தன்மையை ஆய்வு செய்த பின்னரே இந்த மலை பகுதி பாதுகாப்பான பகுதியா, இல்லையா? என தெரியவரும்” என்று பேராசிரியர் மோகன் தெரிவித்தார்.