சென்னை:சென்னை ஐஐடி வளாகத்தில் சிறு குறு, நடுத்தர நிறுவனங்களை தொழில் நுட்ப உதவியுடன் வளர்ச்சியடையச் செய்வதற்கான Walmart center for tech excellence மையம் இன்று (பிப்.28) தொடங்கப்பட்டது. இதற்காக சென்னை ஐஐடி மற்றும் வால்மார்ட் நிறுவனம் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி, “வால்மார்ட் நிறுவனம் மற்றும் சென்னை ஐஐடி இணைந்து புதிய மையத்தை தொடங்கி உள்ளோம். சிறு, குறு, நடுத்தரத் தொழில் நுட்பத்தை மேம்படுத்துவதற்கான பயிற்சியை இந்த மையத்தின் மூலம் வழங்க உள்ளோம்.
நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் 30 சதவீதம் சிறு, குறு, நடுத்தர தொழில் துறையின் மூலமாக உள்ளது. தொழில்நுட்ப ரீதியாக தொழில் நிறுவனங்களை வளர்ச்சி அடையச் செய்வதுதான் எங்கள் நோக்கம். இதன் மூலமாக, உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு தொழில் வழியில் வழிகாட்டுதல் கிடைக்கும்.
எம்எஸ்எம்இ நிறுவனங்கள், தங்களுக்குத் தேவையான தொழில்நுட்பங்களை இந்த மையத்தின் மூலம் பெற்றுக் கொள்ளலாம். மேலும், சரியான தொழில்நுட்பத்துடன் கொடுக்கும்போது வங்கிகளும் எளிதில் நிதியுதவி வழங்கும். மேலும், சந்தையில் ஒரு பொருளை அளிப்பதற்கு முன்னர், அதன் தரத்தையும் பார்க்க வேண்டியுள்ளது.