தேனி: மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உள்ள எருமாப்பட்டியைச் சேர்ந்தவர் மாயி (55). இவருக்கு பவித்ரா (25) என்ற மகள் இருந்தார். பவித்ராவிற்கும், உசிலம்பட்டி அருகே உள்ள சொரக்காபட்டியைச் சேர்ந்த பூவேந்தன் (27) என்பவருக்கும், 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று, 4 வயதில் குழந்தை ஒன்று உள்ளது.
கணவன் - மனைவி இருவருக்கும் இடையே குடும்ப பிரச்னை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இருவருக்கும் சண்டை ஏற்பட்டதன் காரணமாக, பவித்ரா மற்றும் அவரது தந்தை மாயி, தேனி அருகே உள்ள பழனிச்செட்டிபட்டியில் உள்ள முருகன் கோவில் தெருவில் இருக்கும் தனது உறவினர் வீட்டில் கடந்த மூன்று நாட்களாக இருந்துள்ளனர்.
இந்நிலையில், இன்று பிற்பகல் பழனிச்செட்டிபட்டி வீட்டுக்குத் தனது நண்பருடன் வந்த பூவேந்தன், தனது மனைவி மற்றும் மாமனார் உடன் தகராறு செய்து, தான் வைத்திருந்த கத்தியால் தனது மனைவி பவித்ராவையும், தடுக்க வந்த பவித்ராவின் தந்தை மாயியையும் குத்திக் கொலை செய்துவிட்டு, இருசக்கர வாகனத்தில் தப்பிச் செல்லும் போது, பூவேந்தருடன் வந்த அவரது நண்பர் முருகேசனை அப்பகுதி மக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த பழனிசெட்டிபட்டி போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும், கொலை செய்து விட்டு தப்பி ஓடிய பூவேந்தனை போலீசார் தேடி வருகின்றனர். மக்கள் அதிகம் வசிக்கக்கூடிய இப்பகுதியில் குடும்பப் பிரச்னை காரணமாக நடைபெற்ற இரட்டைக் கொலையால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க:நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வள்ளலார் சர்வதேச மைய கட்டுமானப் பணிகள் மீண்டும் தொடக்கம்! - Vallalar International Center