ஈரோடு: பவானிசாகர் அணை நீர்த்தேக்கப் பகுதியில் பூதிகுப்பம் என்ற வன கிராமம் அமைந்துள்ளது. சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட விளாமுண்டி வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள பூதிகுப்பம் கிராமத்தில் நஞ்சன் (75), துளசியம்மாள் (70) ஆகிய தம்பதி வசித்து வந்துள்ளனர். தினமும் இருவரும் சேர்ந்து வனப்பகுதிக்குள் சென்று சுண்டைக்காய் சேகரிப்பது வழக்கம்.
இத்தம்பதி நேற்று (ஜன.௨௪) விளாமுண்டி வனப்பகுதியில் உள்ள வால் மொக்கை என்ற இடத்தில் சுண்டைக்காய் பறித்துக் கொண்டிருந்த போது அப்பகுதியில் புதர் மறைவில் நின்றிருந்த காட்டு யானை திடீரென இருவரையும் தும்பிக்கையால் தாக்கி மிதித்துள்ளது.
காட்டு யானை தாக்கியதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இருவரது அலறல் சத்தம் கேட்ட அப்பகுதி மக்கள் வனப்பகுதிக்குள் சென்று பார்த்த போது, நஞ்சன் மற்றும் துளசியம்மாள் இருவரையும் தாக்கிய காட்டு யானை அதே பகுதியில் சுற்றித்திரிவதைக் கண்டு அச்சமடைந்தனர்.