திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த கேத்தாண்டப்பட்டி கிராமத்தில் எருது விடும் விழா நேற்று (பிப்.15) நடைபெற்றது. இதில் தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர் மற்றும் ஆந்திர மாநிலத்தின் சில பகுதிகளிலிருந்து 200க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்று, விழாவில் சீறிப் பாய்ந்தன.
இந்த விழாவில், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் மற்றும் ஊர் மக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழாவில் நாட்றம்பள்ளி பகுதியைச் சேர்ந்த ஒருவரின் காளை சீறிப் பாய்ந்து ஓடிக் கொண்டிருந்தபோது, கொனமந்தை அருகே இருந்த 30 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்தது.
அதன் பின்னர், பாதுகாப்பு பணியில் இருந்த தீயணைப்பு மற்று மீட்புப் படை வீரர்கள் விரைந்து சென்று, மாட்டை உயிருடன் மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர். இதனிடையே, இந்த விழாவில் பள்ளி மாணவர்கள் சிலர் சீருடையுடன் சீறிப் பாய்ந்து ஓடும் காளையை அடித்து விளையாடினர்.