திருப்பூர்:திருப்பூர் மாநகராட்சி சொத்து வரி, குப்பை வரி என அனைத்து வித வரி உயர்வை ரத்து செய்ய கோரியும், வாடகைக்கு 18 சதவீத ஜிஎஸ்டி வரிவிதிப்பு என மக்களை நசுக்கும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து திருப்பூர் மாவட்டத்தில் இன்று மாபெரும் கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை ஒருநாள் அடையாள கடையடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. இதன் மூலம் அனைத்து வணிகர் சங்கங்களும், எதிர்க்கட்சிகளும் தங்கள் எதிர்ப்பை மத்திய, மாநில அரசுகளுக்கு தெரியப்படுத்தி வருகின்றனர்.
துரைசாமி பேட்டி (Credits - ETV Bharat Tamilnadu) திருப்பூர் மாவட்டம் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டு இருப்பதால், ஏறத்தாழ சுமார் ரூ.100 கோடி வர்த்தகம் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், பின்னலாடைகள் பகுதியாக விளங்கும் காதர் பேட்டை பகுதி முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக ரூ.50 கோடிக்கும் அதிகமான பின்னலாடை வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க :"எங்க மண்ணுதான், எங்க மானம்" டங்ஸ்டன் திட்டம் வேண்டாம்; மலை மீதேறி மக்கள் போரட்டம்!
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்கமும் இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளதால் 2000க்கும் மேற்பட்ட பனியன் நிறுவனங்கள் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. இந்தப் போராட்டத்திற்கு அதிமுக, பாஜக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.
கடைகள் அடைப்பு (Credits - ETV Bharat Tamilnadu) இதுகுறித்து திருப்பூர் அனைத்து வணிகர்கள் சங்கங்களின் தலைவர் துரைசாமி கூறுகையில்," திருப்பூர் மாநகராட்சியில் சொத்துவரி, குப்பை வரி மிக அதிகமாக இருக்கிறது. இந்த வரியால் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது உடனடியாக, மாநகராட்சி வரியை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வரி குறைக்காவிட்டால் மீண்டும் போராட்டம் நடைபெறும்" என தெரிவித்தார்.
இதுகுறித்து ஹோட்டல் உரிமையாளர் சங்க செயலாளர் நாகராஜ் கூறுகையில், "திருப்பூரில் வரி உயர்வால் பெரும்பாலான ஹோட்டல்கள், பேக்கரிகள் பாதிக்கப்பட்டிருக்கின்றன. குப்பைக்கு தனியாக கட்டணம் கேட்பது ஹோட்டல் உரிமையாளர்களை பெரும் சிரமத்திற்கு ஆளாக்கி உள்ளது. இந்த வரி அனைத்தும் பொதுமக்கள் தலையிலேயே விழுவதால், இதனை உடனடியாக குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என தெரிவித்தார்.