சென்னை: வருகிற அக்டோபர் 31-ம் தேதி தீபாவளித் திருநாள் நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட இருக்கிறது. இதற்காக சென்னை, கோவை, திருப்பூர் உள்ளிட்ட தொழிற்சாலை நகரங்களில் இருந்து லட்சக்கணக்காணோர் சொந்த ஊர் செல்லத் திட்டமிட்டுள்ளனர். அவர்களுக்காக சுமார் 14 ஆயிரம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் நேற்று அறிவித்தார்.
அதேநேரம், கார் மற்றும் இதர சொந்த வாகனங்களில் செல்வோர் தாம்பரம், பெருங்களத்தூர் வழியாக செல்வதைத் தவிர்த்து, திருப்போரூர், செங்கல்பட்டு அல்லது வண்டலூர் வெளிவட்டச் சாலையை பயன்படுத்த வேண்டும் எனவும், கடந்த ஆண்டுகளை போலவே நடப்பு ஆண்டிலும் போதுமான பேருந்துகள் இயக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
இவ்வாறு வழக்கமாக கோயம்பேட்டில் இருந்து அசோக் பில்லர், வடபழனி, கிண்டி, பல்லாவரம், தாம்பரம் பெருங்களத்தூர் வழியாக சென்னைக்கு வெளியே வருவதற்குப் பதில், மீஞ்சூர் - வண்டலூர் வெளிவட்டச் சாலை வழியாக வெளியூர் செல்பவர்கள் வருமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது.
இதையும் படிங்க:போக்குவரத்து அமைச்சர் Vs சிஐடியு; மக்கள் மீது அக்கறை யாருக்கு அதிகம்? வலுக்கும் வாக்குவாதம்!
இதன்படி, மீஞ்சூரில் இருந்து வண்டலூர் செல்வதற்கு பட்டாபிராம், ஒரகடம், பூந்தமல்லி, ஆவடி ஆகிய பகுதிகளைக் கடந்து வண்டலூர் வெளிவட்டச் சாலையில் வர வேண்டும். போக்குவரத்து நெரிசல் இல்லாத இந்த வெளிவட்டச் சாலையானது சுமார் 60 கிலோமீட்டர் தூரம் கொண்டது. அதேநேரம், கோயம்பேட்டில் இருந்து நெற்குன்றம், மதுரவாயல், செந்நீர் குப்பம் வழியாக சென்னை வெளிவட்ட சாலையைக் கடந்து முடிச்சூர், மண்ணிவாக்கம் வழியாக வண்டலூரை அடைந்து சொந்த ஊர்களுக்குச் செல்லலாம். ஆனால், இவை அனைத்திற்கும் குறைந்தபட்சம் ஒரு மணிநேரம் மற்றும் அதிகபட்சம் ஒன்றரை மணி நேரம் ஆகும்.
மேலும், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் இயக்கம் குறித்து அறிந்து கொள்ளவும், ஏதேனும் புகார் தெரிவிக்கவும் 9445014436 என்ற எண்ணில் 24 மணி நேரமும் தெரிவிக்கலாம். மேலும், ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் 18004256151 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண், 044-24749002, 044- 26280445, 044 26281611 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் எனவும் அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார். அதேநேரம், கடந்த ஆண்டைப் போல தனியார் பேருந்து நிறுவனத்தினருடன் வரும் 24ஆம் தேதி கூட்டம் நடத்தப்பட உள்ளது. அதனைத் தொடர்ந்து பொதுமக்கள் புகார் தெரிவிக்க வாட்ஸ்ஆப் எண் அறிவிக்கப்படும்.