தருமபுரி: நாடாளுமன்றத் தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ள நிலையில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் தேர்தல் பணிகள் விறுவிறுப்படைந்துள்ளது. ஏழு கட்டமாக நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு, தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது.
தமிழ்நாட்டில் திமுக, அதிமுக, பாஜக ஆகிய கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்கப்பட்டுள்ள நிலையில், நாம் தமிழர் கட்சி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் தனித்து போட்டியிடுகிறது. இதனால், தமிழ்நாட்டில் நான்கு முனைப்போட்டி நிலவுகிறது. இதனிடையே, அரசியல் கட்சித் தலைவர்கள் வேட்பாளர் அறிமுக கூட்டம் மற்றும் பிரச்சார கூட்டங்களைத் தீவிரமாக நடத்தி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக, தருமபுரி நாடாளுமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அறிமுகக் கூட்டம் தருமபுரியில் நடைபெற்றது. இந்த வேட்பாளர் அறிமுக கூட்டத்தில், தமிழ்நாடு உழவர் மற்றும் வேளாண் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு, திமுக வேட்பாளர் ஆ.மணியை அறிமுகம் செய்து வைத்தார்.
இதையும் படிங்க:திருத்தணியை மீட்ட விநாயகத்தின் பேத்தி முதல் பாமக தலைவரின் மனைவி வரை.. செளமியா அன்புமணியின் பின்னணி என்ன?
அதனைத் தொடர்ந்து கூட்டத்தில் பேசிய அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், "கடந்த தேர்தலில் எந்த ஒரு சாதனையும் புரியாமல் திமுக வாக்காளர்களைச் சந்தித்தது. அப்பொழுது 39 தொகுதிகளில் 38 தொகுதிகளில் திமுக அமோக வெற்றி பெற்றது. ஆனால், தற்போது 3 ஆண்டுகளாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு எண்ணற்ற திட்டங்களைச் செய்துள்ளது.
அதில் பெண்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயணம், மாதம் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை என இன்னும் பல சிறப்பான திட்டங்கள். திமுக அரசின் திட்டத்தால் பயனடையும் மகளிர் அனைவரையும் வாக்குகளாக மாற்ற வேண்டும். அதேபோல், எல்லா மகளிர் வீட்டிலும் உதயசூரியன் சின்னம் வரையப்பட வேண்டும்.
அதைப் பார்த்து எதிர்கட்சியினர் வாக்கு சேகரிக்க வராமல் திரும்பிச் செல்ல வேண்டும். எனவே, திமுக கூட்டணி கட்சியினர், வீடுதோறும் எடுத்துச் சொல்லி வாக்கு சேகரிக்க வேண்டும்" எனத் தெரிவித்தார். இந்த கூட்டத்தில் திமுக தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், விசிக, மதிமுக, திராவிடர் கழகம், ஆம் ஆத்மி, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகளைச் சார்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க:நாதக கிருஷ்ணகிரி வேட்பாளராக வீரப்பனின் மகள் வித்யா போட்டி!