திருப்பத்தூர்:சென்னையைச் சேர்ந்தவர் அபி நரசிம்மன் (52). இவர் தேன் வியாபாரம் செய்து வரும் நிலையில், இவருக்குச் சொந்தமாக மேட்டூரில் அலுவலகம் உள்ளது. இதன் காரணமாக தினந்தோறும் தேன் வாங்கிக் கொண்டு மேட்டூரிலிருந்து சென்னைக்கு சென்று வருவது வழக்கம்.
இந்நிலையில், வழக்கம்போல் அபி நரசிம்மன் தனது இண்டிகோ காரில் மேட்டூரில் இருந்து சென்னை நோக்கி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது, வெலக்கல்நாத்தம் பைனப்பள்ளி அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென காரில் இருந்து புகை வந்துள்ளது. இதனால் சுதாரித்துக் கொண்ட அபி நரசிம்மன், உடனடியாக காரை விட்டு கீழே இறங்கி உள்ளார். பின்னர் கண்ணிமைக்கும் நேரத்தில் கார் தகதகவென தீப் பற்றி எரிந்துள்ளது.
இதையும் படிங்க:“அமெரிக்க தொழில்நுட்பத்தால் கூவம் ஆறு மறுசீரமைக்கப்படும்”- மேயர் பிரியா உறுதி!
இதில் காரில் இருந்த 2 லட்சம் ரூபாய் மதிப்பாலான 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் எரிந்து நாசமாகின. இந்தச் சம்பவம் குறித்து நாட்றம்பள்ளி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த நாட்றம்பள்ளி தீயணைப்புத் துறையினர் தீயை முழுவதுமாக அனைத்தனர். இதனால் சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவிற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
இதனைத் தொடர்ந்து, போலீசார் மற்றும் நெடுஞ்சாலைத் துறையினர் போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர். மேலும் இந்த சம்பவம் குறித்து நாட்றம்பள்ளி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த விபத்தில் கருகிய 2,000 ரூபாய் நோட்டுகள் என்னவாகும் என்ற சந்தேகம் அனைவருக்கும் இருக்கும். இதேபோல் நாம் அனைவரின் கையில் புரளும் 10 ரூபாய், 20 ரூபாய், 100 ரூபாய் நோட்டகள், 2000 ரூபாய் நோட்டுகள் கிழிந்தோ, நஞ்சுபோகியோ, அழுக்கடைந்தோ இருந்தால் அதை விற்பனையாளர்கள் ஏற்றுக் கொள்வதில்லை.
சரியாக பார்த்து வாங்கியிருக்க வேண்டும் எனக் கூறுவர். அதேநேரம், இந்த நோட்டு செல்லவில்லை என எண்ணி பத்திரமாக எடுத்து வைத்துக் கொள்வதை நிறுத்த வேண்டும். மக்கள் புழக்கத்தில் உள்ள ரூபாய் நோட்டுகள் அழுக்கடைவதும், கிழிவதும், நஞ்சுபோவதும் வழக்கம். எனவே, இதற்கென இந்திய ரிசர்வ் வங்கி ரூபாய் நோட்டுகளை மாற்றி கொள்ளுவதற்கான விதிமுறைகளைக் காணலாம்.
இந்த விதிமுறைப்படி அழுக்கடைந்த மற்றும் சிறிது வெட்டப்பட்ட ரூபாய் நோட்டுகள் அல்லது துண்டுகளாகப் பிரிந்து வந்த அல்லது அத்தியாவசியப் பகுதிகள் விடுபட்ட ரூபாய் நோட்டுகளை நாம் அனைத்து பொதுத்துறை வங்கிகளிலும், தனியார் துறை வங்கிகளிலும், இந்திய ரிசர்வ் வங்கியின் அனைத்து கிளை அலுவலகத்திலும் மாற்றிக்கொள்ளலாம்.
ஆனால், இந்த எறிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கியின் வெளியீட்டு அலுவலகத்தில் மட்டுமே மாற்ற முடியும். எனவே, அத்தகைய நோட்டுகளை வைத்திருக்கும் நபர்கள் ரிசர்வ் வங்கியின் உரிமைகோரல்கள் பிரிவின் அதிகாரியை அணுகுவதன் மூலமாக மட்டுமே எரிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகளையும், அதிகப்படியாக கிழிந்த தொலைந்த பாகங்களுடன் உடைய ரூபாய் நோட்டுகளையும் மாற்ற முடியும்.