தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாற்றுத்திறனாளிகளுக்கு ரயில்களில் சீட் ஒதுக்கீடு மறுக்கப்படுகிறதா? - ரயில் ஆய்வாளர் விளக்கம்! - DIFFERENTLY ABLED RAILWAY QUOTA - DIFFERENTLY ABLED RAILWAY QUOTA

DIFFERENTLY ABLED RAILWAY QUOTA: மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்கள் எக்ஸ்பிரஸ் ரயில்களில் கட்டணச் சலுகை இன்றி தங்களுக்குரிய சீட்டு ஒதுக்கீட்டைப் பெறலாம் என ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மாற்றுத்திறனாளி குறியீடு புகைப்படம்
மாற்றுத்திறனாளி குறியீடு புகைப்படம் (Image Credit - ETV Bharat TamilNadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 7, 2024, 4:30 PM IST

மதுரை:கரோனா பெருந்தொற்று காலத்தில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகைகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கான சீட் ஒதுக்கீடு அப்படியே உள்ளது எனவும், கட்டணச் சலுகைகள் இன்றி தங்களுக்குரிய இருக்கை மற்றும் படுக்கை வசதிகளை பெற்றுக் கொள்ளலாம் என ரயில்வே அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து இந்திய ரயில்கள் குறித்த ஆய்வாளரும், ஏபிஜிபி (Akhil Bhartiya Grahak Panchayat) அமைப்பின் ஆலோசனைக் குழு உறுப்பினருமான அருண்பாண்டியன் கூறுகையில், “மாற்றுத்திறனாளிகளுக்கான இருக்கை மற்றும் படுக்கை ஒதுக்கீடு வெகு காலமாகவே இருந்து வருகிறது. கரோனா பெருந்தொற்று காலத்திற்கு முன்பாக அவர்களுக்கான கட்டணத்தில் சலுகை இருந்தது.

அதாவது, மூத்த குடிமக்களுக்கான கட்டணம் 50 விழுக்காடாக இருந்தது. அதேபோன்று, மாற்றுத் திறனாளிகளுக்கும் கட்டணச் சலுகை இருந்தது. இந்த கட்டணச் சலுகை மட்டுமே தற்போது ரத்து செய்யப்பட்டு, சீட்டு ஒதுக்கீடு அப்படியே உள்ளது. கடத்த 2015ஆம் ஆண்டுக்கு முன்பு வரை நேரடியாக டிக்கெட் கவுண்டரில் சென்று மாற்றுத்திறனாளிகளுக்கான சான்றிதழை காண்பித்து பதிவு செய்ய வேண்டியதாக இருந்தது.

தற்போது ஆன்லைனில் பதிவு செய்துவிட்டு பயணம் மேற்கொள்ளும் போது, மாற்றுத் திறனாளிகளுக்கான சான்றிதழை டிக்கெட் பரிசோதகரிடம் காட்ட வேண்டும். ஐஆர்சிடிசி தளத்திலேயே டிக்கெட் முன்பதிவு செய்யும்போது மாற்றுத்திறனாளிகளுக்கு என்று தனி தெரிவுகள் தற்போதும் உண்டு. அதேபோன்று தான் மூத்த குடிமக்களுக்கான சீட்டு ஒதுக்கீடு இப்போதும் உண்டு. கட்டண சலுகை மட்டும்தான் கிடையாது.

மாற்றுத்திறனாளிகளுக்காக வைகை, தேஜஸ் போன்ற பகல் நேர விரைவு ரயில்களிலும் இரண்டு சீட்டுகள் ஒதுக்கீடாக உண்டு. இரவு நேர ரயில்களில் படுக்கை வசதி கொண்ட பொது பெட்டிகளில் நான்கு சீட்டுகளும் மூன்றாம் வகுப்பு குளிர்சாதன வசதி கொண்ட பெட்டியில் இரண்டு சீட்டுகளும் உள்ளன.

முதல் மற்றும் இரண்டாம் வகுப்பு ஏசி பெட்டிகளில் இந்த சலுகை கிடையாது. குறிப்பிட்ட சீட்டுகள் பதிவு செய்யப்பட்டு விட்டால் இதற்கு வெயிட்டிங் லிஸ்ட் என்பதெல்லாம் கிடையாது. மாற்றுத்திறனாளியின் உதவியாளருக்கும் இந்த ஒதுக்கீட்டிற்கு உட்பட்டே சீட்டு வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் வந்தே பாரத் ரயில்களில் மாற்றுத் திறனாளிகளின் வசதிக்காகவே இன்ஜின் அமைந்துள்ள கோச்சில் தனிச்சிறப்பு மிக்க பெரிய கழிவறை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மாற்றுத்திறனாளிகளுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள இந்த சீட்டுகள் அனைத்தும் அவர்களுக்காக மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. மாற்றுத்திறனாளிகளும் சரி மூத்த குடிமக்களும் சரி பயணத்தின் போது தங்களுக்குரிய சான்றிதழ்களை கண்டிப்பாக கையில் வைத்திருக்க வேண்டும்” என்றார்.

இதையும் படிங்க: நீட் தேர்வு: மாநில பாடத்திட்டத்தில் இருந்து 160 கேள்விகள்.. ஆசிரியர்கள் கூறுவது என்ன? - UG NEET EXAM

ABOUT THE AUTHOR

...view details