சென்னை:தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் இளநிலை பட்டப்படிப்புகளான (BVSc & AH, BTech) படிப்பில் சேர்வதற்கு நாளை (ஜூன் 3) முதல் 21ஆம் தேதி வரை https://adm.tanuvas.ac.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் இளநிலைப் பட்டப்படிப்புகளில் கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு பட்டப்படிப்பில் சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியில் 120 இடங்களும், நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், ஒரத்தநாடு கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் ஆகியவற்றில் தலா 100 இடங்களும், சேலம் தலைவாசல் கூட்டுரோடு கால்நடை ஆராய்ச்சி நிறுவனத்தில் 80 இடங்களும், தேனி வீரபாண்டி, உடுமலைப்பேட்டை கால்நடை மருத்துவக்கல்லூரி ஆகியவற்றில் தலா 80 இடங்களும், என மொத்தம் 660 இடங்கள் உள்ளன.