சென்னை:தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வுத் தேர்வு ஜூலை மாதம் நடக்கவிருப்பதை முன்னிட்டு, அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்கள் ஜூன் 11ஆம் தேதி முதல் ஜூன் 26ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் 11, 12ஆம் வகுப்பில் மாதம் ஆயிரம் ரூபாய் கல்வி உதவித் தொகை பெறுவதற்கான தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வுத் தேர்வு நடத்தப்பட உள்ளது.
இத்தேர்விற்கு ஜூன் 11ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரையில் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அரசுத் தேர்வுத்துறை இயக்குனர் சேதுராமவர்மா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “2024 - 2025ஆம் கல்வியாண்டிற்கான தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வுத் தேர்வு, ஜூலை 21ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவுள்ளது.
தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் 2023 - 2024ஆம் கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு பயின்று தற்போது 2024 - 2025ஆம் கல்வியாண்டில் 11ஆம் வகுப்பினை அரசுப் பள்ளிகளில் பயிலும் இந்தத் தேர்விற்கு விண்ணப்பிக்கலாம். இந்தத் தேர்வில் 1000 மாணவர்கள் (நடைமுறையில் உள்ள இடஒதுக்கீட்டின் அடிப்படையில் 500 மாணவர்கள் + 500 மாணவியர்கள்) தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு உதவித்தொகையாக ஒரு கல்வியாண்டிற்கு ரூபாய் 10 ஆயிரம் (மாதம் ரூ.1000 வீதம் ஒரு கல்வியாண்டிற்கு 10 மாதங்களுக்கு மட்டும்) இளநிலை பட்டப்படிப்பு வரை வழங்கப்படும்.