தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பாரம்பரிய விளையாட்டுகள் கற்றல், கற்பித்தலுக்கு வழி வகுக்கிறதா? - முனைவர் அழகுசெல்வம் கூறுவது என்ன? - Traditional Games - TRADITIONAL GAMES

Traditional Games: தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளின் வழியே, குழந்தைகளுக்கான கற்றல், கற்பித்தல் முறைகளை மிக எளிதாக கொண்டு செல்ல முடியும் எனவும், அதனை வருங்காலத்தில் பள்ளிக்கல்வித்துறை கவனத்தில் கொண்டு ஊக்கமளிக்க வேண்டும் என்றும் அருப்புக்கோட்டை அரசு கலைக் கல்லூரி துணை முதல்வர் அழகு செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முனைவர் அழகுசெல்வம், பாரம்பரிய விளையாட்டுகள் புகைப்படம்
முனைவர் அழகுசெல்வம், பாரம்பரிய விளையாட்டுகள் புகைப்படம் (credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 18, 2024, 9:05 PM IST

முனைவர் அழகுசெல்வம் பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

மதுரை: அருப்புக்கோட்டை அரசு கலைக்கல்லூரி துணை முதல்வரும், தமிழ் துறையின் தலைவருமான பேராசிரியர் முனைவர் அழகு செல்வம் தமிழர்களின் பாரம்பரிய கலைகள் குறித்து பல ஆய்வுகள் மேற்கொண்டவர். மேலும், பாரம்பரிய விளையாட்டுகள் குறித்த 'பாரம்பரிய கலைகள் மற்றும் விளையாட்டுகள் வழியே கற்றல் கற்பித்தல் முறைகள்' என்ற தலைப்பில் இலங்கையிலும், மலேசியாவிலும் நடைபெற்ற கருத்தரங்குகளில் கட்டுரைகள் சமர்ப்பித்தவர்.

இந்த நிலையில், தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகள் குறித்து ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு, முனைவர் அழகு செல்வம் அளித்த சிறப்புப் பேட்டியில், "மதுரை மாவட்ட அரசு அருங்காட்சியகத்தின் சார்பாக பாரம்பரிய விளையாட்டுகள் போட்டிகள் நடைபெற்றன. பல்லாங்குழி, தட்டாங்கல், தாயம், நொண்டி, கிட்டிப்புள், கோலிக்குண்டு ஆகியவற்றில் வயது வித்தியாசமின்றி அனைவருக்கும் போட்டிகள் நடத்தப்பட்டன.

ஆனால், இந்த விளையாட்டுகள் மட்டுமே 60, 70 வகைகள் உள்ளன. தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகள் குறித்த அடிப்படைகளை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இந்த விளையாட்டுகள் அனைத்தும் மனித சமூகத்தின் உழைப்பு, இயற்கை சார்ந்ததாகும். அவர்தம் உடலோடு சேர்ந்து கற்றுக் கொள்கின்ற விளையாட்டு முறைகள் ஆகும்.

மன நலனுக்கு ஏற்றது:இந்த விளையாட்டுக்கான அமைப்பு முறையும் சரி, பயன்படுத்துகின்ற பொருட்களும் சரி அனைத்தும் இயற்கை சார்ந்தவை. இங்கு நிலவும் பருவ காலத்திற்கு ஏற்றவாறு இந்த விளையாட்டுகள் நம் முன்னோர்களால் உருவாக்கப்பட்டுள்ளன.

அதேபோன்று, குழந்தைகளின் வயதுக்கு ஏற்றவாறு இந்த விளையாட்டுகள் வரையறுக்கப்பட்டுள்ளன. இருந்த போதும் கூட அனைத்து வயதினரும் விளையாடக்கூடிய வகையில், இந்த விளையாட்டுகள் கட்டமைக்கப்பட்டுள்ளன. பல்லாங்குழி, தட்டாங்கல் போன்ற விளையாட்டுகள் மனதை பக்குவப்படுத்தக் கூடியவைகளாக உள்ளன. அதே போன்று இளைஞர்கள், குழந்தைகளுக்கு உடலை பக்குவப்படுத்துகின்ற விளையாட்டுகள் உள்ளன.

இயற்கை சார்ந்தவை:இந்த விளையாட்டுகள் அனைத்துமே இயற்கை சார்ந்ததாக உள்ளன. தாயம் விளையாடுவதற்கு புளியங்கொட்டையை உரசிப் பயன்படுத்துகிறோம். இதற்காக செயற்கையான பொருட்களை வாங்கி பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.

நெகிழி சார்ந்த பொருட்களின் பயன்பாடும் இங்கு இல்லை. இதனோடு கற்கள், சோவி ஆகியவற்றையும் பயன்படுத்தலாம். நமது பாரம்பரிய விளையாட்டுகளில் பயன்படுத்தக்கூடிய பொருட்கள் அனைத்துமே மண்ணோடு மக்கி விடக் கூடியவை. அவை ஒருபோதும் தேங்கி நிற்காது.

மனிதன் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்த பிறகு இறந்து மண்ணோடு மண்ணாகி விடுவதைப் போன்று இந்த பொருட்களும். ஆனால் பாரம்பரிய விளையாட்டுகள் அப்படியே இருக்கும். அவை தலைமுறை தலைமுறையாகக் கடத்தப்படும். உடலுக்கும், மனதுக்கும் எந்த வித தீங்கும் விளைவிக்காத விளையாட்டுகள் தான் நமது பாரம்பரியத்தில் உள்ளன.

கற்றல் - கற்பித்தல் :ஒவ்வொரு விளையாட்டும் ஒவ்வொரு விஷயத்தை கற்றுக் கொடுக்கும். குறிப்பாக, பல்லாங்குழி இந்த விளையாட்டின் வாயிலாக மாணவர்கள் எண்ணிக்கை திட்டமிடுதல், பொறுமை, விட்டுக் கொடுத்தல் ஆகியவற்றை கற்றுக் கொள்கிறார்கள்.

இவை எல்லாவற்றையும் விட, உலகம் முழுவதும் பல்வேறு விளையாட்டுகளில் நடுவர்கள் என்ற முறை உண்டு. ஆனால். தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டில் ஒருவருக்கொருவர் தான் மற்றொருவருக்கு நடுவராக இருப்பார் என்பது வியப்பிற்குரிய ஒரு கட்டமைப்பு. இது மிக நுட்பமான விஷயமாகும். இவை அனைத்தையும் கபடி, எரிபந்து, பிள்ளையார் பந்து, தட்டாங்கல், கில்லி, பாண்டி போன்ற விளையாட்டுகளில் நுட்பமாகக் காணலாம்.

நெகிழ்ந்த மலேசிய ஆசிரியர்கள்:அண்மையில் நான் மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்றிருந்தபோது அங்குள்ள மாணவர்களுக்கு நமது பாரம்பரிய விளையாட்டுகளைச் சொல்லிக் கொடுத்தேன். ஆனால், அங்குள்ள ஆசிரியர்கள் இந்த விளையாட்டிலிருந்து வெகு தூரம் அந்நியப்பட்டு விட்டார்கள்.

இவை அனைத்தையும் அவர்களுக்கும் கற்றுத்தந்த போது நமது பாரம்பரிய விளையாட்டுக்களின் செழுமையை அவர்கள் உணர்ந்து என்னிடம் பேசியது நெகிழ்ச்சியைத் தந்தது. பல்லாங்குழி போன்ற விளையாட்டுகள் எல்லாம் சிறுசேமிப்பின் அவசியத்தை உணர்த்துவன ஆகும். திட்டமிட்டு விளையாடினால், எத்தனை லாபம் பெறலாம் என்பதை உணர்ந்து விளையாடக் கூடிய விளையாட்டு பல்லாங்குழி. நேரெதிராக விளையாடுகின்ற இருவரின் சமத்துவத்தை இந்த விளையாட்டுகள் உணர்த்துகின்றன.

சங்கிலித் தொடர்:இந்த விளையாட்டில் ஆசிரியர்கள் எனப்படுவோர் இளைய குழந்தைகளுக்கு மூத்த குழந்தைகள் தான். இதுதான் மரபுத்தன்மை வாய்ந்தது. கற்றல், கற்பித்தலை தொடர்ச்சியாகக் கொண்டு செல்லும் ஒரு வழிமுறையாக இந்த ஆசிரியர் தன்மை திகழ்கிறது. இது ஒரு சங்கிலித் தொடராக நிகழ வேண்டும் என்ற நோக்கத்தில் தான், நமது மரபு சார்ந்த விளையாட்டுகளை மதுரை மாவட்ட அரசு அருங்காட்சியகம் ஊக்குவித்து வருகிறது.

விவசாயத்தைப் பேன்றது:தமிழர் மரபு சார்ந்த இந்த விளையாட்டுகளை உலகம் முழுவதும் கொண்டு சேர்ப்பதற்காகத் தான் என்னைப் போன்றவர்கள் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறோம். அறுவடை செய்யச் செய்ய விளைந்து கொண்டிருக்கும் விவசாயத்தைப் போலவே மரபு விளையாட்டுகளும் சொல்லச் சொல்ல வளரும்.

இதன் மூலம் வளர்ச்சி பெற்ற முழுமை அடைந்த ஒரு சமூகத்தின் பிரதிநிதியாக தங்களை அவர்கள் உணரத் தொடங்குவார்கள். தமிழக அரசு பாரம்பரிய கலைகளை மீட்டெடுக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவது போல் எதிர்காலத்தில் பள்ளிக்கல்வித்துறை இதுபோன்ற கற்றல், கற்பித்தல் முறைக்காக நமது பாரம்பரிய விளையாட்டுகளை ஊக்கப்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் அனைத்து பள்ளிகளிலும் இது போன்ற முயற்சி மேற்கொள்ளத் தொடர்ந்து இயங்கி வருகிறோம்" என்றார்.

இதையும் படிங்க:ஐபிஎல் அணிகளுக்கு வருமானம் எப்படி வருகிறது? - Ipl Money Making

ABOUT THE AUTHOR

...view details