தர்மபுரி: கர்நாடக - கேரள மாநிலங்களில் பெய்யும் தொடர் கனமழையின் காரணமாக காவிரி படுகையில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகள் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது முழு கொள்ளளவை அடைந்தது. கபினி கிருஷ்ணராஜ சாகர் அணைகள் நிரம்பியதை அடுத்து அணையின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கர்நாடகா உபரி நீரை காவிரி ஆற்றில் வெளியேற்றி வருகிறது.
கர்நாடக மாநில பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அணையின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு லட்சத்து 30 ஆயிரம் கன அடி வரை தண்ணீர் திறந்து விடப்பட்டது. நேற்று ஒரு லட்சத்து 55 ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் கபினி மற்றும் கே ஆர் எஸ் அணைகளில் இருந்து தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டது.
அணைகளில் இருந்து நீர் திறப்பு அதிகரித்தான் காரணமாக தமிழகத்தில் தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட ஒன்பது மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு மத்திய நீர் ஆணைய அதிகாரி வெள்ள அபாய எச்சரிக்கை கடிதம் அனுப்பி இருந்தார்.