தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தீபாவளி வாழ்த்துகள் கூறும் திருவாவாடுதுறை ஆதீனம் மற்றும் தருமபுரம் ஆதீனம்! - ADHEENAM ON DIWALI HISTORY

மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதீனத்தின் 27வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி சுவாமிகள் மற்றும் குத்தாலம் அருகே திருவாவடுதுறை ஆதீனத்தின் 24வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண சுவாமிகள் மக்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

திருவாவாடுதுறை ஆதீனம் மற்றும் தருமபுரம் ஆதீனம்
திருவாவாடுதுறை ஆதீனம் மற்றும் தருமபுரம் ஆதீனம் (Credits- ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 31, 2024, 1:15 PM IST

மயிலாடுதுறை:மயிலாடுதுறையில் அமைந்துள்ள 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த தருமபுரம் ஆதீனத்தின் 27வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், “ ஒளி என்பது வெற்றியின் அடையாளம்.

தீபாவளியும் புராண தினங்கள்: தீபாவளி பண்டிகை தீமையின் வடிவமான நரகாசுரனை அழித்ததால் கொண்டாடப்படுகிறது. ஸ்கந்த புராணத்தின்படி சக்தியின் 21 நாள் கேதார கௌரி விரதம் முடிந்தது இந்த தினத்தில் விரதம் முடிந்த சக்தியை சிவன் தன்னில் ஒருபாதியாக ஏற்று 'அர்த்தநாரீஸ்வரர்' வடிவம் பெறும் நாள்.

இதனைப்போல் வால்மீகி இராமாயணம் இராமபிரான் இலங்கை அரசனான இராவணனை அழித்து சீதையை மீட்டு, வனவாசம் முடித்து, திரும்பிய நாளை இராமனின் குடிகள் அனைவரும் மகிழ்ச்சியுடன் தீபங்கள் ஏற்றி கொண்டாடினர். தீபாவளி அன்று அஞ்ஞானத்தின் வடிவமான இருளை அழித்து, ஞான தீபங்களை ஏற்றுகின்றோம். இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் பிரசித்திப் பெற்ற சமயப்பண்டிகையான தீபாவளி, நம் நாடு மட்டுமின்றி அண்டை நாடுகளான வங்காள தேசம், இலங்கை, மலேசியா உள்ளிட்ட நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது.

தீபாவளி என்றால் என்ன?தீபாவளி என்பதற்கு 'தீபங்களின் வரிசை' என்று பொருள். விஷ்ணு புராணம், தீபாவளி அன்று பிரம்ம முகூர்த்தத்தில் நீராடி மகாலெட்சுமியை வணங்கினால் லெட்சுமி கடாட்சம் பெருகும் என்கிறது. தீபாவளி தினத்தன்று எண்ணை தேய்த்துக் குளித்தால் தீமைகள் விலகும், புண்ணியம் உண்டாகும். தீபாவளி தினத்தில் எண்ணைக்குளியல் செய்பவருக்கு கங்கையில் மூழ்கிக் குளித்த புனிதப்பயன் கிட்டும். இதனை 'தைலே லெட்சுமி, ஜல கங்கா' என்று துலாபுராணம் குறிக்கின்றது.

இதையும் படிங்க:மதுரையில் களைகட்டிய தீபாவளி.. புத்தாடை அணிந்து பட்டாசு வெடித்து மக்கள் உற்சாகம்!

அனைத்திலும் இறைவன்:தீபாவளி தினத்தன்று குங்குமம், சந்தனம், மலர்கள், வெந்நீர், புத்தாடை, பட்டாசுகள், காய்ச்சிய எண்ணெய், சிகைக்காய் பொடி, இனிப்புப் பண்டங்கள், இலேகியம், தீபம் வைத்து இறைவனை வழிபடுவர். எண்ணெயில் லெட்சுமி தேவியும், சிகைக்காய் பொடியில் சரஸ்வதியும், சந்தனத்தில் பூமாதேவியும், குங்குமத்தில் கௌரியும், புஷ்பத்தில் மோகினிகளும், வெந்நீரில் கங்கையும், புத்தாடைகளில் மகாவிஷ்ணுவும், இலேகியத்தில் தன்வந்திரியும், இனிப்பு பண்டங்களில் அமிர்தமும் இருந்து அருள்பாலிப்பதாக ஐதீகம். இந்த தீபாவளி திருநாளில் மக்கள் அனைவரும் ஒளி வடிவாகிய இறைவனை வணங்கி இருளை அகற்றி, வேறுபாடுகளை மறந்து ஒற்றுமையுடன் மகிழ்ச்சியோடு கொண்டாட வல்ல ஸ்ரீசெந்தமிழ்ச் சொக்கநாத பெருமானின் திருவருளைச் சிந்திக்கின்றோம்” என்றார்.

அதேபோல் மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே திருவாவடுதுறை ஆதீனத்தின் 24வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் தீபாவளி நல்வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “ தீபாவளி பண்டிகை மக்களால் மிகவும் உற்சாகமாக கொண்டாடப்படும் பண்டிகை. தீபாவளி தினத்தன்று எண்ணெய் தேய்த்து நீராடி புத்தாடைகள் அணிந்து ஆக்கபூர்வமாக ஒருவரை மாற்றுகிறது. மேலும் வான வேடிக்கையின் போது சுய மற்றும் சூழல் பாதுகாப்பினை கவனத்தில் கொள்ள வேண்டும்.

தொடர்ந்து தீய சக்தியின் அழிவுக்கும் நன்மைகளின் பெருக்கத்திற்கும் அடையாளமாகத் தீபாவளி நன்னாள் திகழ்வதாகவும் , துன்பங்கள் விலகி சுபிட்சம் பெருக இறைவனை பிரார்த்திக்க வேண்டும். இந்த தீபாவளி மக்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியையும் நிம்மதியையும் கொடுத்து வாழ்வாங்கு வாழ வகை செய்ய வேண்டும்” எனக் கூறினார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறியஇங்கே க்ளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details