சென்னை:தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தில் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு மார்ச் 1ஆம் தேதி முதல் ஏப்ரல் 8ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது. இவர்களுக்கான செய்முறைத்தேர்வுகள் பிப்ரவரி 12ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரையில் நடைபெற உள்ளன. இந்த நிலையில் அரசுத் தேர்வுத்துறை இயக்குநர் சேதுராமவர்மா 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வினை நடத்துவது குறித்து அறிவித்து உள்ளார்.
12ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் பிப்ரவரி 12ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரையிலும், 11ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் பிப்ரவரி 19 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரையிலும் நடைபெறுகிறது. 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அறிவியல் பாடச் செய்முறைத்தேர்வு பிப்ரவரி 23ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது. 11, 12ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வினை நடத்துவது குறித்த வழிகாட்டுதல்களை அரசுத் தேர்வுத்துறை பள்ளியின் தலைமை ஆசியர்களுக்கு அனுப்பி உள்ளது.
அதில், 2024ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வெழுதும் மாணவர்களுக்குச் செய்முறைத் தேர்வுகள், எழுத்துத் தேர்வுகளுக்கு முன்னதாக நடத்தப்படவேண்டும். பள்ளி மாணவர்களுக்குப் பள்ளித் தலைமையாசிரியர்கள்www.dge.tn.gov.inஎன்ற இணையதளத்தில், செய்முறைத் தேர்வுக்கான வெற்று மதிப்பெண் பட்டியல்களை அனைத்து தேர்வர்களுக்கும் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
மாற்றுத் திறனாளி மாணவர்கள் 11, 12ஆம் வகுப்பில் படித்தால், பொதுத் தேர்வுகள் எழுதும் உடல் இயக்கக் குறைபாடு, பார்வைக் குறைபாடு மற்றும் செவித்திறன் குறைபாடுள்ள மாற்றுத் திறனாளி தேர்வர்களது விருப்பத்தின் பேரில் செய்முறைத் தேர்வின் போது ஆய்வக உதவியாளர் நியமனம் செய்தல், இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் பாடங்களில் மட்டும் செய்முறைத்தேர்வுக்குப் பதிலாகச் செய்முறை தொடர்பான கொள்குறி வகை வினாக்கள் (Multiple Choice Questions) அடங்கிய வினாத்தாள்கள் வழங்கி செய்முறைத்தேர்வு செய்து கொள்ள உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.