தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சவுக்கு சங்கர் ஜாமீன் நிபந்தனையை தளர்த்தக் கோரிய மனு.. மதுரை அமர்வு முக்கிய உத்தரவு!

பெண் காவலர்களை தவறாக பேசிய வழக்கில் வழங்கப்பட்ட ஜாமீன் நிபந்தனையில் தளர்வு கோரி சவுக்கு சங்கர் தாக்கல் செய்த மனுவில், வழக்குகளின் பட்டியலை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.

By ETV Bharat Tamil Nadu Team

Published : 4 hours ago

சவுக்கு சங்கர், உயர் நீதிமன்றம் மதுரை
சவுக்கு சங்கர், உயர் நீதிமன்றம் மதுரை (Photo Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை:சவுக்கு சங்கர் மீது பதியபட்ட வழக்குகளில் வழங்கப்பட்ட ஜாமீனில் நிபந்தனைகளை மாற்றக்கோரிய வழக்கில், சவுக்கு சங்கர் மீது பதியப்பட்ட வழக்கில் எத்தனை வழக்குகள் உள்ளது? எத்தனை வழக்குகளில் ஜாமினில் உள்ளார்? எந்த காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வருகிறார் என்பது குறித்து தகவல்களை மனுதாரர் தரப்பு தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

பெண் காவலர்களை தவறாக பேசிய வழக்கில் அனைத்து வழக்குகளுக்கும் சேர்த்து ஒரே காவல் நிலையத்தில் கையெழுத்திட உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என சவுக்கு சங்கர் உயர் நீதிமன்ற மதுரை மார்வில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அவர் தாக்கல் செய்த மனுவில், “பெண் காவலர்களுக்கு எதிராக பேசியதாக என் மீது கோவை, சென்னை, திருச்சி, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதேபோல், கஞ்சா வைத்திருந்ததாக தேனியில் ஒரு வழக்கும் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டேன். இந்நிலையில், என் மீது குண்டர் சட்டத்தின் கீழ் தமிழக அரசு சிறையில் அடைத்தது. குண்டர் சட்டத்தை எதிர்த்து தாக்கல் செய்த மனுவில் என் மீது போடப்பட்ட குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டது.

இதையும் படிங்க:"போன்சாய் செடி போன்ற முதல்வர்" - விடுதலையான உடன் சவுக்கு சங்கர் விமர்சனம்.. கள்ளக்குறிச்சி ஆதாரம் இருப்பதாக அதிரடி பேட்டி!

மேலும், பெண் காவலர்களுக்கு எதிராக பேசிய வழக்கில் உச்ச நீதிமன்றம் வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்துள்ளது. பல்வேறு வழக்குகளில் எனக்கு ஜாமீன் வழங்கப்பட்ட போது சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் நேரில் ஆஜராகி கையெழுத்திட நிபந்தனை விதிக்கப்பட்டது. ஆனால், தற்போது நான் சென்னையில் வசிப்பதால் அனைத்து வழக்குகளுக்கும் சேர்த்து ஒரே காவல் நிலையத்தில் கையெழுத்திடும் வகையில் ஜாமீன் நிபந்தனையில் தளர்வு வழங்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நீதிபதி பரதசக்கரவர்த்தி முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பல்வேறு காவல் நிலையங்களில் நிபந்தனை கையெழுத்து போட முடியாத சூழல் உள்ளது. எனவே, ஒரே காவல் நிலையத்திற்கு மாற்ற வேண்டும். மேலும், சவுக்கு சங்கர் தற்போது இருதய பாதிப்பால் சிகிச்சை பெற்று வருவதால், நீதிமன்றம் ஒரே காவல் நிலையத்தில் கையெழுத்திட உத்தரவு பிறப்பிக்க வேண்டுன் என வாதிட்டார்.

இதனையடுத்து, அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சவுக்கு சங்கர் ஒரே காவல் நிலையத்தில் அனைத்து வழக்குகளில் நிபந்தனை கையெழுத்திட கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதனையடுத்து, இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, “சவுக்கு சங்கர் மீது எத்தனை வழக்குகள் உள்ளன? எத்தனை வழக்குகளில் ஜாமீன் பெற்றுள்ளார்? எந்த காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வருகிறார் என்பது குறித்த தகவல்களை மனுதாரர் தரப்பில் தாக்கல் செய்ய வேண்டும்” என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை அக்.21ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

ABOUT THE AUTHOR

...view details