மதுரை: அனைத்து மாவட்டங்களிலும் கைவிடப்பட்ட குவாரிகளை பராமரிப்பது தொடர்பான குழுக்கள் அமைக்கப்பட்டு பசுமை நிதி வசூலிக்கப்படுவதை உறுதி செய்ய கோரி மதுரையைச் சேர்ந்த சத்தியமூர்த்தி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அவர் தாக்கல் செய்த மனுவில், “தமிழக கனிமவள சட்டத்தின் படி, கைவிடப்பட்ட குவாரிகளை பராமரிப்பு செய்வதற்காக பசுமை நிதி உருவாக்கப்பட்டது. திருத்தப்பட்ட விதிகள் கனிம வள விதிகளின் கீழ் இந்த பசுமை நிதி பயன்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் தலைமையில், கனிமவளத் துறையின் உதவி இயக்குநர், மாவட்ட வருவாய் அலுவலர், பொதுப்பணி துறையின் செயற்பொறியாளர், சுற்றுச்சூழல் அலுவலர், மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலர், தீயணைப்பு துறை அலுவலர்களை உறுப்பினர்களாக கொண்ட குழு அமைக்கப்படும்.
இந்தக்குழு கைவிடப்பட்ட குவாரிகளை பராமரிப்பது, பசுமை நிதிகளை முறையாக வசூலிப்பது, பயன்படுத்துவது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள வேண்டும். தமிழகத்தில் 23 மாவட்டங்களில் மட்டுமே கைவிடப்பட்ட குவாரிகளை பராமரிப்பது தொடர்பான மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழு அமைக்கப்பட்டுள்ளது. அவற்றில் 6 மாவட்டங்களில் மட்டுமே மாத வாரியான கூட்டங்கள் நடத்தப்படுகின்றன.