மதுரை: சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் புன்னைவனநாதர் சன்னதியில் இருந்த கற்கள் பதிக்கப்பட்ட பழமையான மயில் சிலையும், ராகு, கேது சிலைகளும் மாற்றம் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக ஆதாரங்களைத் தாக்கல் செய்ய அறநிலையத் துறைக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன் அடிப்படையில், சிலை கடத்தல் சிறப்புப் பிரிவு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலின் செயல் அலுவலராக இருந்த திருமகள், இந்து சமய அறநிலையத்துறை ஊழியர்களான வேணு ஸ்ரீனிவாசன், முத்தையா ஸ்தபதி, அர்ச்சகர்கள் மற்றும் கோயிலின் ஊழியர்கள் சேர்ந்து திட்டமிட்டு சிலைகளை மாற்றியது தெரியவந்தது.
இதன் காரணமாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு, இந்த வழக்கின் விசாரணை கும்பகோணம் கூடுதல் தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்ட நிலையில், குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, சிலை மாயமான வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட திருமகள் உள்ளிட்டோர், கும்பகோணம் கூடுதல் தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிக்கையை ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி நாகார்ஜுன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில், "சாட்சிகள் முறையாக விசாரிக்கப்படாமல், அவசரகதியில் விசாரணை முடிக்கப்பட்டு இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுதாரரின் மீது பதிவு செய்யப்பட்டிருக்கும் பிரிவுகள் ஏற்கத்தக்கதல்ல" என வாதிடப்பட்டது.