தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"பக்தர்கள் உண்ட வாழை இலையில் அங்கப்பிரதட்சணம்?" - உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு! - Karur Sadhguru temple issue - KARUR SADHGURU TEMPLE ISSUE

Karur Sri Sadasiva Brahmendra Jeeva Samadhi Temple Issue: கரூர் நெரூர் சத்குரு சதாசிவம் பிரம்மேந்திராள் ஜீவ சமாதி கோயிலில் இன்று (மே 18) நடக்கவுள்ள ஆராதனை விழாவின்போது, பக்தர்கள் உணவருந்திய இலையிலேயே அங்கபிரதட்சணம் செய்வது தொடர்பான வழக்கில் உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

கரூர் சத்குரு கோவில் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளை புகைப்படம்
கரூர் சத்குரு கோவில் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளை புகைப்படம் (Credit - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 18, 2024, 10:25 AM IST

மதுரை: கரூர் நெரூரைச் சேர்ந்த நவீன்குமார் என்பவர், கரூர் நெரூர் சத்குரு சதாசிவம் பிரம்மேந்திராள் ஜீவ சமாதி கோயிலில் இன்று (மே 18) நடக்கவுள்ள ஆராதனை விழா தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், "நெரூர் சத்குரு சதாசிவம் பிரம்மேந்திராள் ஜீவ சமாதி கோயிலில் வரும் மே 18ஆம் தேதி நடக்கவுள்ள ஆராதனை விழாவின்போது, பக்தர்கள் உணவருந்திய பிறகு, அந்த இலையில் அங்கப்பிரதட்சண வேண்டுதலை நிறைவேற்ற அவர்களுக்கு அனுமதி வழங்க வேண்டும்.

காரணம் இக்கோயிலில் சுமார் 100 வருடங்களுக்கு மேலாக நடைபெற்றுவரும் இந்த திருவிழாவின் இறுதி நிகழ்ச்சிக்கு வந்துள்ள பக்தர்கள், தங்கள் வேண்டுதலுக்காக கோயில் சாமி தரிசனத்திற்கு வந்துள்ள பக்தர்கள் என அனைவரும் உணவு உண்ட பின், தாங்கள் சாப்பிட்ட எச்சில் இலையில் உருண்டு அங்கபிரதட்சணம் செய்து தங்கள் வேண்டுதலை நிறைவேற்றுவது வழக்கம். எனவே இதற்கு அனுமதி வழங்க வேண்டும்" என கோரியிருந்தார்.

இந்த மனுவானது நீதிபதி சுவாமிநாதன் முன் விசாரணைக்கு வந்தது. அதைத்தொடர்ந்து இவ்வழக்கை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில், "கிராமங்களில் வழக்கமான மத நிகழ்வுகளை நடத்துவதற்கு அதிகாரிகளின் அனுமதி தேவையில்லை. விழா ஏற்பாட்டாளர்கள் ஒலிபெருக்கிகள் பொருத்த வேண்டும் உள்ளிட்ட காரணங்களுக்காக மட்டுமே அனுமதி பெற வேண்டும்.

எனவே, மனுதாரருக்கு அனுமதி வழங்குவது பற்றிய கேள்வி எழவே இல்லை. இதில், ஜாதி பாகுபாடு இல்லை என்று தெளிவாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஆகையால், பக்தர்கள் உணவை உட்கொண்ட பிறகு, வாழை இலையில் அங்கப்பிரதட்சணம் செய்ய தடை இல்லை. மேலும் வழிபாட்டு உரிமை, அடிப்படை உரிமையை மனுதாரர் நன்றாகப் பயன்படுத்த முடியும். இதில், மற்றவர்கள் தலையிட முடியாது. எனவே இந்த விழா நடத்த அனுமதி வழங்கப்படுகிறது" என உத்தரவிட்ட நீதிபதி, இந்த வழக்கை முடித்து வைத்தார்.

இதையும் படிங்க: நெல்லையை மீண்டும் மிரட்டுகிறதா வானிலை?.. திடீரென வந்திறங்கிய பேரிடர் மீட்பு குழு - காரணம் என்ன?

ABOUT THE AUTHOR

...view details