சென்னை: சென்னையில் நேற்று (ஆக.04) மாலை முதல் மழை பெய்து வரக்கூடிய சூழ்நிலையில், மாநகரில் உள்ள மிகவும் பிரதான சாலையான போரூர் மேம்பாலம் சாலை, போக்குவரத்து நெரிசலால் கடும் போக்குவரத்து பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.
மேலும், ஆமை வேகத்தில் வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக நகர்ந்து செல்லும் சூழல் உள்ளதனால் இந்த போரூர் மேம்பாலம் மற்றும் போரூர் - குன்றத்தூர் சாலை, பூந்தமல்லி - மவுண்ட் சாலை, போரூர் முதல் வடபழனி வரை செல்லக்கூடிய ஆற்காடு சாலை மற்றும் பூந்தமல்லி வரை செல்லும் சாலை என நான்கு சாலைகளும் தற்போது கடும் போக்குவரத்து நெறிகளுக்கு உள்ளாகியுள்ளது.
இதன் காரணமாக இந்த பகுதி முழுவதும் போக்குவரத்து நெரிசலால் ஸ்தம்பித்துக் காணப்படுகிறது. போரூர் மேம்பால முதல் ராமாபுரம் வழி கிண்டி செல்லக்கூடிய சாலையில் மேம்பாலத்தில் இருந்து சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து மெதுவாக ஊர்ந்து செல்லக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த கடும் போக்குவரத்து நெரிசல் காரணமாக பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்கள், மருத்துவமனை உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லக்கூடிய பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகள், வாகன ஓட்டிகள் என அனைத்து தரப்பினரும் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.
மேலும், இந்த பகுதிகளில் மெட்ரோ இரண்டாம் கட்ட பணி நடந்துவரக்கூடிய ஒரு சூழ்நிலையால் சாலை குறுகலாக உள்ளது இதன் காரணமாகவும் வாகனங்கள் இந்த பகுதியில் எளிதில் கடந்து செல்ல முடியாத ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.