சென்னை: சொத்துக் குவிப்பு வழக்குகளில் முன்னாள் இந்நாள் அமைச்சர்கள் விடுவிக்கப்பட்டதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து சூமோட்டோ வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொண்டார்.
அந்த வகையில், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் முன்னாள் அமைச்சர் வளர்மதி ஆகியோருக்கு எதிரான வழக்குகளின் இறுதி விசாரணை இன்று முதல் துவங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனை அடுத்து, இந்த வழக்குகள் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, முன்னாள் அமைச்சர் வளர்மதிக்கு எதிரான வழக்கின் விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளதை அடுத்து, அந்த வழக்கின் விசாரணையைச் செப்டம்பர் மாதத்திற்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் ஒத்திவைத்தார்.
அதன் தொடர்ச்சியாக, அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில், மூத்த வழக்கறிஞர்கள் ஆஜராக உள்ளதால் விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.