சென்னை:ஐஐடியின் மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையுடன், தமிழ்நாடு அரசின் பொது சுகாதார மற்றும் தடுப்பு மருத்துவ இயக்குனரகம், சேப்பியன்ஸ் ஹெல்த் பவுண்டேஷன் ஆகியவை இணைந்து உணவில் உப்பை குறைக்க வேண்டியதன் அவசியம் குறித்து கருத்தரங்கை நடத்தியது.
இந்நிகழ்ச்சியில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் கலந்து கொண்டு உணவில் குறைந்த உப்பு பயன்பாடுகள் குறித்தும், உணவில் அதிகளவில் உப்பு உட்கொள்வதால் ஏற்படும் சிக்கல்கள் குறித்தும் சிறப்புரையாற்றினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் கூறியதாவது, “தொற்றா நோய்களான உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை போன்ற நோய்கள், ‘மக்களைத்தேடி மருத்துவம்’ மூலமாக கண்டறிந்து ஒரு கோடிக்கும் மேற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இளம் வயதில் இருந்தே உப்பு பயன்பாட்டை குறைக்க வேண்டும்.
இதனால் ரத்தக்குழாய் பாதிப்புகள், எலும்பு தேய்மானம், சிறுநீரக பிரச்னைகள் போன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. உணவில் அதிகளவில் உப்பு சேர்க்கும் போது அது சிறுநீர் மூலம் வெளியேறும். அப்போது கால்சியம் சத்தும் இணைந்து வெளியேறும். இதனால் எலும்பு பாதிப்பும் ஏற்படும்.
இதுகுறித்து உணவு பாதுகாப்புத்துறை சார்பில், உணவு உற்பத்தி நிறுவனங்களுக்கு லேபிலிங் செய்து விற்பனை செய்ய முறையாக அறிவுறுத்தப்பட்டுள்ளது .மேலும், உணவு பாக்கெட்டுகளில் உப்பு சேர்க்கப்பட்டுள்ள அளவையும் பதிவிடவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என தெரிவித்தார்.
இதனையடுத்து, சென்னை ஐஐடியின் மருத்துவ அறிவியல் துறை பேராசிரியர் கிருஷ்ணகுமார் பேசுகையில், “உப்பு அதிகமாக எடுத்துக் கொள்வதால் இரத்தக்குழாயில் உள்ள செல்கள் பாதிக்கப்பட்டு அடைப்புகள் ஏற்படுகிறது. சர்க்கரை நோய் உள்ளவர்கள் உப்பை பயன்படுத்தும் அளவைக் குறைக்க வேண்டும். உடலில் உள்ள உப்பின் அளவை பொறுத்து ரத்தக்கொதிப்பு அதிகரிக்கிறது.
மனித உடலில் இருந்து உப்பு வெளியேறும் பொழுது எலும்பிற்குத் தேவையான கால்சியம் சத்தையும் எடுத்துக் கொண்டு செல்கிறது. தற்பொழுது ஏற்பட்டுள்ள வாழ்க்கை முறை மாற்றத்தால் 25 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு நீரிழிவு நோய் வருகிறது. உப்பின் அளவை 25 வயது முதல் குறைக்க ஆரம்பித்தால் நல்லது. இளம் வயது முதல் உப்பின் அளவை குறைக்க பழகிக் கொள்ள வேண்டும்” இவ்வாறு அவர் கூறினார்.