தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கள்ளச்சாராயம் விவகாரம்: "சிகிச்சைக்கு வர தயங்கியதால் பலி எண்ணிக்கை அதிகரிப்பு" - அமைச்சர் மா.சுப்பிரமணியன்! - kallakurichi illicit liquor issue - KALLAKURICHI ILLICIT LIQUOR ISSUE

kallakurichi illicit liquor issue: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில், பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சைக்கு வர தயங்கியதாலும், தாமதமாக சிகிச்சைக்கு வந்ததாலும் உயிரிழப்பு அதிகமாக நேர்ந்தது என சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

சிகிச்சை குறித்து கேட்டறியும் அமைச்சர் மா.சுப்பிரமணியன்
சிகிச்சை குறித்து கேட்டறியும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் (Credits - ma subramanian X Page)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 21, 2024, 10:54 PM IST

புதுச்சேரி: கள்ளக்குறிச்சி சம்பவத்தில் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருபவர்களை, தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சந்தித்து, அவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,"கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் தற்போது வரை 168 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் நடைபெற்ற முதல் ஒரு சில மணி நேரங்களிலேயே முதலமைச்சர், பொதுப்பணித்துறை அமைச்சரையும், என்னையும், தமிழ்நாடு சுகாதார அமைப்பு திட்ட இயக்குனரையும், மருத்துவக்கல்வி இயக்குனரையும் கள்ளக்குறிச்சிக்கு அனுப்பி அவர்களுக்கு தேவையான மருத்துவ வசதிகளை ஏற்படுத்தி தருவதற்கு அறிவுறுத்தினார்.

அந்தவகையில் இந்த சம்பவம் நடைபெற்ற பகுதிகளில் மருத்துவமனைகளுக்கு வராமல் இருப்பவர்களை மாவட்ட சுகாதார துணை இயக்குனர் தலைமையிலான குழுவினை அமைத்து வீடுகள் தோறும் சென்று கண் எரிச்சல், வயிற்று எரிச்சல் போன்ற பாதிப்புகளோடு இருப்பவர்களை மருத்துவமனையில் சேர்க்கும் பணி தொடங்கப்பட்டது. அந்தப் பணிகளால் 55 பேர் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

சிகிச்சை பெறுவோர் விவரம் (Credits -ETV Bharat Tamilnadu)

இதுவரை மொத்தம் 48 பேர் உயிரிழந்தனர். 48 பேரில் கள்ளக்குறிச்சி மருத்துவனையில் 25 பேரும், புதுவை ஜிப்மரில் 3 பேரும், சேலம் அரசு மருத்துவமனையில் 16 பேரும், விழுப்புரத்தில் 4 பேர் என்று மொத்தம் 50 பேர் உயிரிழ்ந்தனர்.

தமிழக முதலமைச்சர் நேற்று விளையாட்டுத் துறை அமைச்சரை கள்ளக்குறிச்சிக்கு அனுப்பி அவர் வாயிலாக மரணமடைந்த குடும்பத்தாருக்கு நிவாரணமாக ரூ.10 லட்சத்திற்கான காசோலையினை அவர்களுடைய இல்லங்களுக்கே சென்று அமைச்சர் வழங்கினார்.

திருவண்ணாமலை, திருச்சி, சேலம், விழுப்புரம் போன்ற மாவட்டங்களிலிருந்து 67 மருத்துவர்கள் கள்ளக்குறிச்சி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறார்கள். மேலும், 200க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவம் சார்ந்த பணியாளர்கள் 24 மணிநேரமும் மருத்துவ சேவையாற்றி வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி மருத்துவமனையைப் பொறுத்தவரை 600 படுக்கைகளுடன் கூடிய மருத்துவமனை. இருந்தாலும் இந்த பாதிப்புகளில் இருப்பவர்களை கவனித்துக் கொள்ள 50 படுக்கைகள் கூடுதலாக பிரத்யேகமாக அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மெத்தனால் பாதிப்புக்குள்ளானவர்களுக்கு உடனடியாக பார்வை பறிபோகும். இருதயம், சிறுநீரகம், கல்லீரல் போன்ற உறுப்புகள் படிப்படியாக செயலிழக்க தொடங்கும் என்பதால் அவர்களுக்கு தேவையான சிகிச்சை முறைகளை மருத்துவர்கள் சிறப்பாக செய்துக் கொண்டிருக்கிறார்கள்.

முறையாக மூக்கு வழியே பிராண வாயு செலுத்துதல், நரம்பு வழியே குளுக்கோஸ் செலுத்துதல், எத்தனால் ஊசி முதல் ஒரு மணி நேரத்திற்கு ஒன்றும், இரத்த நாளத்தில் உள்ள பைக்கார்போனேட் அளவினை சரி செய்ய சோடாபைகார்பேனேட் (Soda Bicarbonate) ஊசி செலுத்துதல், ஹீமோடயாலிஸிஸ் (Hemodialysis) செய்தல், பென்டோபிராசில் (Pantoprazole) ஊசி போடுதல், செயற்கை சுவாசம் அளிப்பதற்கு வெண்டிலேட்டர் சிகிச்சை அளித்தல் என பல்வேறு வகையான சிகிச்சைகள் தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருகிறது.

இதில் மது அருந்தி நீண்ட நேரமானவர்கள் அவர்களது உடலுறுப்பு ஒவ்வொன்றாக செயலிழந்து வருகிறது என்று தெரியும் போது கூட மருத்துவமனைக்கு வர தயக்கம் காட்டியதால் இறப்புகள் அதிகம் சந்திக்க நேர்ந்தது. புதுவையைப் பொறுத்த வரை 17 பேர் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

மேலும், இங்கு இன்று காலை நோயாளியுடன் உடனிருந்தவருக்கு பாதிப்பு தென்பட்டு அவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரும்கூட இரண்டு நாட்களுக்கு முன்னாள் மது அருந்தியிருக்கிறார். அவர் வெளியில் சொல்லாமல் அதற்குரிய பாதிப்பு தென்பட்டவுடன் தற்போது அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

எனவே, புதுவை ஜிப்மர் மருத்துவமனையைப் பொறுத்தவரை 9 பேர் Critical Ward லும், 8 பேர் பொது வார்டிலும் அனுமதிக்கப்பட்டு மிகச் சிறப்பாக சிகிச்சை பெற்று வருகிறார்கள். Critical Ward இல் உள்ள 9 பேரில் 4 பேர் மிகவும் ஆபத்தான நிலையில் இருக்கிறார்கள். அவர்களுக்கு இம்மருத்துவமனை நிர்வாகம் 100% அனைத்து சிகிச்சைகளையும் வழங்கி வருகிறார்கள்.

சேலத்தினைப் பொறுத்தவரை 31 பேர் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். 23 பேர் Stable நிலையிலும், 8 பேர் Critical நிலையிலும் இருக்கிறார்கள். அடுத்து சேலம் மாவட்டத்திற்கு சென்று அங்கு பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்திக்க இருக்கின்றோம்.

முதலமைச்சர் இன்று சட்டப்பேரவையில் இது சம்பந்தமாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை எல்லாம் மிக தெளிவாக எடுத்துக்கூறி பாதிக்கப்பட்டவர்களுக்கு எத்தகைய நிவாரணங்கள் வழங்கப்பட்டிருக்கிறது. இன்னமும் எதிர்காலத்தில் எந்த மாதிரியான நிவாரணங்கள் வழங்கப்படும் என்பதனையும் தெரிவித்து

அதோடு மட்டுமல்லாமல் எதிர்காலத்தில் எத்தனால் விஷயத்தில் மிகக் கடுமையான நடவடிக்கைகள் எடுப்பது குறித்தும் மிக தெளிவாக எடுத்துக் கூறியிருக்கிறார். அந்தவகையில் முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி, ஒவ்வொரு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்து, அவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிவதுமான பணியில் ஈடுபட்டிருக்கிறோம்" என தெரிவித்தார்.

இதையும் படிங்க:கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம்: "நான் ஓடி ஒளிபவன் அல்ல; இரும்புக்கரம் கொண்டு அடக்கி வருகிறேன்" - சபையில் முதல்வர் ஆவேசம் - kallakurichi illicit liquor issue

ABOUT THE AUTHOR

...view details