சென்னை: மத்திய அரசின் மருந்துகள் மற்றும் அழகு சாதனப் பொருட்கள் சட்டம் மற்றும் விதிகளின் படி மருத்துவர்கள் மருந்துகளின் பெயரை கேப்பிட்டல் எழுத்துகளில் (CAPITAL LETTERS) மட்டுமே எழுத வேண்டும் என உள்ளது என அறிவித்துள்ளது. அதற்கு, மருந்துகளின் பெயர்களைப் பெரிய எழுத்துகளில் மருத்துவர்கள் எழுத வேண்டும் என மருத்துவத்துறை எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
அதாவது, மருத்துவர்கள் நோயாளிகளுக்குப் பரிந்துரைக்கும் மருந்து சீட்டுகளில் உள்ள மருந்துகளின் பெயர்கள் புரியவில்லை என்ற கருத்துக்கள் பல நாட்களாக இருந்து வருகிறது. மேலும் மருத்துவர்கள் சில சமயங்களில் அவசரமாக எழுதித் தரும் சில மருந்துகளின் பெயர்கள் மருந்தாளுநர்களால் கூட புரிந்து கொள்ள முடியாத சூழல் கூட வந்ததாகக் கூறப்படுகிறது.
அதனால், பல்வேறு குழப்பங்களில் மருந்துகள் மாறி, சில நோயாளிகள் தவறான மருந்தை உட்கொண்ட சம்பவங்களும் நிகழ்ந்துள்ளதாகத் தகவல்கள் உள்ளது. கடந்த சில நாட்களாக இருந்து வந்த இந்த புகார், தற்போது தீவிரமடைந்த நிலையில், சில நாட்களுக்கு முன் இது தொடர்பாக ஒரு வழக்கு ஒடிசா நீதிமன்றத்திற்கு வந்தது. அப்போது, மருத்துவர்கள் எழுதித் தரும் மருந்துகள், பரிந்துரைகள் உள்ளிட்டவை புரியும் வகையில் இருக்க வேண்டும் என்றும், அதற்கான நடவடிக்கைகளை எடுக்கத் தேசிய மருத்துவத் துறைக்கு உத்தரவிட்டுத் தீர்ப்பளித்தது.
அந்த உத்தரவின் அடிப்படையில், நடவடிக்கைகளை மேற்கொண்ட நிலையில், மத்திய அரசும் நோயாளிகளுக்குப் புரியும் வகையில் மருந்துகளின் பெயர்களை எழுதித் தர வேண்டும் என அறிவுறுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பணி புரியும் மருத்துவர்கள், தாங்கள் பரிந்துரைக்கும் மருந்துச் சீட்டில், நோயாளிகளுக்குப் புரியும் வகையில் கேப்பிட்டல் லெட்டரில் அதாவது பெரிய எழுத்துக்களில், தெளிவாக எழுத வேண்டும் எனத் தமிழகச் சுகாதாரத் துறை தரப்பில் உத்தரவு வெளியானது.