மதுரை:மதுரை மாவட்டம், திருவாதவூர் அகதிகள் முகாமில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தனித்தனியான கான்கிரீட் வீடுகளையும், அடிப்படை வசதிகள் செய்து உத்தரவிடக் கோரி தாக்கல் செய்த மனுவில், தமிழக மறுவாழ்வுத்துறை முதன்மைச் செயலர், புலம்பெயர்ந்தோர் நல வாரியத்தின் ஆணையர், மதுரை மாவட்ட ஆட்சியர் பதில் மனுத் தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.
மதுரை திருமால்புரத்தைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் திருவாதவூர் அகதிகள் முகாமில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தனித்தனியான கான்கிரீட் வீடுகளையும், அடிப்படை வசதிகள் செய்து உத்தரவிடக் கோரி மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், "மதுரை மாவட்டம் திருவாதவூர் கிராம பஞ்சாயத்தின் எல்லையில் இலங்கை அகதிகள் முகாம் அமைந்துள்ளது. இந்த முகாமில் 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் வசித்து வருகின்றனர். 2002 ஆம் ஆண்டு முதல் இப்பகுதியில் வசித்து வரும் இவர்கள் மிகச் சிறிய அளவிலான ஆஸ்பெட்டாஸ் போட்ட வீடுகளில் வசித்து வருகின்றனர்.
தற்போது 520க்கும் அதிகமான வீடுகள் சேதம் அடைந்த நிலையில், கான்கிரீட் மேல் தளம் இல்லாமல் காணப்படுகின்றன. முழுமையாக மின்சாரமும் வழங்கப்படுவதில்லை. இதனால் முதியவர்களும், நோயாளிகளும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். 2022ல் 30 கான்கிரீட் வீடுகளும், 10 கழிவறைகளும் கட்டிக் கொடுக்கப்பட்டன. இருப்பினும் தற்போது எந்த கழிவறையும் பயன்படுத்தும் நிலையில் இல்லை. 20 கழிவறைகள் மட்டுமே பயன்படுத்தும் நிலையில் உள்ளன.