திருநெல்வேலி: சென்னையில் இருந்து குருவாயூர் சென்ற குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில், நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் நேற்றிரவு நின்று கொண்டிருந்த போது ரயிலின் கடைசி பெட்டியில் ஏறிய கேரள மாநிலத்தைச் சேர்ந்த 4 பயணிகளுக்கும், ஏற்கனவே ரயிலில் இருந்த பயணிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ரயிலில் ஏறிய கேரள மாநிலத்தை சேர்ந்த நான்கு பயணிகளும் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் வாக்குவாதம் முற்றி கைகலப்பு நடந்த சூழலில் ரயில்வே பாதுகாப்பு படையினர் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி மாற்று பெட்டியில் அமர செய்தனர் இதனையடுத்து நெல்லை ரயில் நிலையத்திலிருந்து குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டு சுமார் 1 கிலோ மீட்டர் தொலைவில் சென்ற போது குறுக்குத்துறை, மீனாட்சிபுரம் இடையே அமைந்துள்ள ரயில்வே கேட் பகுதியில் ரயிலின் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து பயணிகள் நிறுத்தினர். அப்போது முன்பதிவு இல்லா பெட்டியில் இருந்து வாக்குவாதம் மற்றும் சண்டை நடந்தபடியே நான்கு பயணிகள் கீழே இறக்கி விடப்பட்டனர்.
இந்நிலையில் ரயில் அபாய சங்கிலி பிடித்து இழுத்தது தொடர்பாகவும், ரயிலில் இருந்து கீழே இறக்கி விடப்பட்ட பயணிகள் தொடர்பாக விசாரணை நடத்த குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலின் கார்டு சென்ற போது அவரை ரயிலில் இருந்து இறக்கி விடப்பட்ட கேரள மாநிலத்தைச் சேர்ந்த 4 பயணிகள் தரக்குறைவான வார்த்தைகளால் பேசியதுடன் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் சம்பவம் தொடர்பாக ரயில்வே இருப்பு பாதை காவல்துறையினர் மற்றும் நெல்லை சந்திப்பு ரயில்வே பாதுகாப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
காவல்துறையினர் சம்பவ இடம் வருவதற்குள் ரயிலில் இருந்து இறக்கி விடப்பட்ட கேரளாவைச் சேர்ந்த 4 பயணிகளும் ரயிலில் இருந்த பயணிகளோடு கடுமையாக வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் கற்களை கொண்டும் வீசி தாக்குதலில் ஈடுபட முயற்சித்துள்ளனர்.