சென்னை: சென்னையில் இருந்து குஜராத் மாநிலம் அகமதாபாத் செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் தனியார் பயணிகள் விமானம், நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து புறப்படத் தயாரானது. அந்த விமானத்தில் பயணம் செய்ய வந்த பயணிகளின் உடமைகளை, சென்னை விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் பரிசோதித்து, பயணிகளை விமானத்திற்கு அனுப்பிக்கொண்டு இருந்தனர்.
அப்போது, அந்த விமானத்தில் வந்த அமெரிக்கா நாட்டைச் சேர்ந்த ஆண்ட்ரூ யர்ஷன் (40) என்பவரின் கைப்பையை பாதுகாப்பு அதிகாரிகள் ஸ்கேனிங் மிஷினில் வைத்து பரிசோதித்தனர். அப்போது, அந்தப் பைக்குள் அபாயகரமான பொருள் இருப்பதற்கான எச்சரிக்கை மணி ஒலித்தது. இதையடுத்து, பரபரப்படைந்த பாதுகாப்பு அதிகாரிகள், உடனடியாக அந்த கைப்பையை எடுத்து தனியே வைத்துவிட்டு, அமெரிக்க நாட்டுப் பயணி ஆண்ட்ரூ யர்ஷனிடம் விசாரித்தனர்.
அப்போது, அவர் கைப்பைக்குள் அபாயகரமான பொருள் ஏதும் இல்லை எனக் கூறியுள்ளார். ஆனால், பாதுகாப்பு அதிகாரிகள் கைப்பையை திறந்து பரிசோதித்த போது, அதனுள் பாயிண்ட் 223 ரகத்தைச் சேர்ந்த துப்பாக்கிக் குண்டு, லைவ்வாக வெடிக்கும் தன்மையில் இருந்தது. இதையடுத்து, துப்பாக்கிக் குண்டை பறிமுதல் செய்த பாதுகாப்பு அதிகாரிகள், அமெரிக்க பயணியின் அகமதாபாத் பயணத்தை ரத்து செய்தனர்.
அதோடு, அமெரிக்க பயணியிடம் பாதுகாப்பு அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தினர். அப்போது அவர், அமெரிக்காவில் வசிக்கும் தொழில் அதிபர் என்றும், தொழில் விஷயமாக இந்தியாவுக்கு வந்துள்ளதாகவும், இப்போது தான் சென்னையில் இருந்து அகமதாபாத்திற்கு சென்று கொண்டு இருப்பதாகவும் கூறினார்.