சென்னை: சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள ரஷிய அறிவியல் மற்றும் கலாச்சார மையத்தில் செஸ் விளையாட்டு வீரர் குகேஷ்-க்கு பிடே கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில் வெற்றி பெற்றதற்காக பாராட்டு விழா நடைபெற்றது. இதில், இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பின் மூத்த துணைத் தலைவர் அஜய் பட்டேல், ஓபிஎஸ் ஆதரவாளர் ஜே.சி.டி பிரபாகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில், ஒலிம்பிக் கூட்டமைப்பின் மூத்த துணைத் தலைவர் அஜய் பட்டேல் கிராண்ட் மாஸ்டர் குகேஷுக்கு வெள்ளியால் ஆன பட்டேல் சிலையை வழங்கினார்.
இதைத் தொடர்ந்து மேடையில் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளர் ஜே.சி.டி.பிரபாகர், "17 வயதில் சாதனை செய்து இருக்கிற குகேஷை இந்தியாவே பாராட்டுகிறது. இந்நிலையில், தமிழ்நாடு சார்பில் நடைபெறுகிற பாராட்டு விழாவில் கலந்து கொள்வது மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். சதுரங்க விளையாட்டை உலகத்திற்கு அறிமுகப்படுத்திய பெருமை நமக்கு உண்டு.
அந்த பெருமையை தக்க வைக்கும் வகையில், வெற்றிகளைக் குவித்து இந்தியாவில் தமிழகம் முன்னணியில் உள்ளது. தற்போதுள்ள தமிழ்நாடு அரசாங்கம் செஸ் ஒலிம்பியாட் போட்டியை அனைவரும் பாராட்டுகிற வகையில் நடத்தினார்கள். சென்னையில் உலகth தரத்தில் சதுரங்க விளையாட்டுக்கு என்று ஒரு அரங்கம் உருவாக்கப்பட வேண்டும்.
செஸ் போட்டியை நடத்துவதற்காக வெவ்வேறு அரங்கங்களைத் தேடி அலைகிறோம். தமிழக அரசு ஒரு அரங்கத்தை அமைத்துக் கொடுத்தால், அது வரலாற்றில் போற்றப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். அதனை ஒரு வேண்டுகோளாக முன் வைக்கிறேன். வேகமாக பணியாற்றிக் கொண்டிருக்கும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிச்சயமாக இதைக் கவனத்தில் கொண்டு விரைவில் செய்வார் என்று நம்புகிறேன்.
சதுரங்க போட்டிகள் நடத்த தேவையான தொகையை அரசாங்கம் விரைவாக அளிப்பார்களானால், இன்னும் நிறைய பேரை உருவாக்க முடியும். ஒரு காலத்தில் எல்லோராலும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையை விஸ்வநாதன் ஆனந்த் உருவாக்கியது போல் வருங்காலத்தில் குகேஷ் உருவாக வேண்டும்" என்று கூறினார்.
பின்னர், பேசிய கிராண்ட் மாஸ்டர் குகேஷ், "இந்த பாராட்டு விழா நிகழ்ச்சிக்கு எனது தந்தை, தாய் மற்றும் உறவினர்கள் வந்திருப்பது பெரு மகிழ்ச்சி அளிக்கிறது. மேடையில் அமர்ந்திருக்கும் அனைவருடைய அன்பும் அளவுக்கு அதிகமாக இருக்கிறது. இந்த அன்பும், ஆதரவும் கடைசி வரைக்கும் இருக்கும் என்று நம்புகிறேன். நவம்பர் மாதம் நடைபெறவிருக்கும் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெறுவதற்கான அனைத்து முயற்சிகளையும் எடுப்பேன்" என தெரிவித்தார்.
இதையும் படிங்க:“தென் தமிழகத்தில் கூலிப்படை கலாச்சாரம்..” நெல்லை ஜெயக்குமார், தீபக் ராஜா வழக்கை மேற்கோள் காட்டிய கிருஷ்ணசாமி! - K Krishnasamy On Deepak Raja Murder