சென்னை: அரசுக்கு எதிரான போராட்டம் மற்றும் அரசினுடைய நற்பெருக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதாகக் கூறி ஜிஎஸ்டி துணை ஆணையரை, மத்திய நிதி அமைச்சகம் மற்றும் வருவாய்த்துறை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக, ஜிஎஸ்டி துணை ஆணையர் பாலமுருகன், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை பதவியிலிருந்து விலக்கக்கோரி இந்திய குடியரசுத் தலைவருக்கும், பிரதமருக்கும் கடிதம் எழுதியிருந்தார். அதில் அமலாக்கதுறையில் உள்ள அரசு அதிகாரிகளின் சுதந்திரம் என்பது நிர்மலா சீதாராமன் மத்திய நிதியமைச்சராகப் பதவியேற்ற பின்பு பறிக்கப்பட்டு உள்ளதாகவும், குறிப்பாக அமாலக்கதுறையை, பாஜக ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தி வருவதாகவும் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
மேலும், என்னுடைய 30 ஆண்டுகால பணியில் மேல் அதிகாரிகளின் தலையீடோ அல்லது அரசியல் கட்சிகளின் தலையீடோ இருந்தது கிடையாது. ஆனால் சமீப காலமாக என்னுடைய பணியில் அரசியல் கட்சிகளின் தலையீடு என்பது அதிகமாக உள்ளது என்றும் குறிப்பிட்டிருந்தார்.