கோயம்புத்தூர்: நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. அந்த வகையில், தேர்தல் நிலை கண்காணிப்புக் குழுவினர், பறக்கும் படையினர், வீடியோ குழுவினர் போன்றோர் அரசு வாகனங்களான ஜீப், கார் போன்ற வாகனங்களை பயன்படுத்தி, வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் பொருட்கள் இந்த வாகனங்கள் மூலம் வாக்குச்சாவடி மையங்களுக்கு எடுத்துச் செல்லப்பட உள்ளது.
அரசு வாகனங்கள் தவிர, தனியார் வாகனங்களும் வாடகைக்கு எடுக்கப்பட்டு தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளன. தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் வாகனங்கள் எந்தெந்த பகுதிகளுக்கு செல்கிறது என்பதை கண்காணிக்க கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கார், ஜீப் உள்ளிட்ட வாகனங்களுக்கு, ஜிபிஎஸ் கருவி (GPS), சோலார் மூலம் இயங்கும் கேமரா (Solar Camera) அனைத்து வாகனங்களுக்கும் நேற்று (மார்ச் 16) பொருத்தப்பட்டுள்ளன.
இதேபோல், பொள்ளாச்சியிலும் தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கு, ஜிபிஎஸ் கருவி மற்றும் சோலார் கேமரா பொருத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. பொள்ளாச்சியில் தேர்தல் நடத்தும் உதவி அலுவலரும், சார் ஆட்சியருமான கேத்தரின் சரண்யா தலைமையில், பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் காவல்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் கூட்டம் நேற்று நடைபெற்றது.