வேலூர்:வேலூர் மாவட்டம் காட்பாடியைச் சேர்ந்த 19 வயது நர்சிங் படித்து வரும் மாணவி ஒருவர், 2 மாத பயிற்சிக்காக குடியாத்தம் அரசினர் மாவட்ட தலைமை மருத்துவமனையில் பயிற்சி பெற்று வந்துள்ளார். மேலும், குடியாத்தம் அரசினர் மாவட்ட தலைமை மருத்துவமனையில் எலும்பு சிகிச்சை மருத்துவராக பணியாற்றி வருபவர் எஸ்.பாபு.
இந்த நிலையில், அரசு மருத்துவர் பாபு கடந்த ஆகஸ்ட் 30ஆம் தேதி, மருத்துவமனையில் உள்ள ஒரு அறையில் நர்சிங் பயிற்சிக்காக வந்த மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகக் கூறப்படுகிறது. அதனால் அதிர்ச்சியடைந்த மாணவி, கூச்சலிட்டுக் கொண்டே அறையிலிருந்து வெளியே ஓடி வந்து, இதுகுறித்து அங்கு பணியாற்றி வரும் செவிலியர்கள் மற்றும் சக நர்சிங் மாணவிகளிடம் தெரிவித்துள்ளார்.
பின்னர், இந்த சம்பவம் குறித்து மாணவி பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் அடிப்படையில் நர்சிங் மாணவியின் பெற்றோர், ஆக.31ஆம் தேதி மருத்துவர் பாபு மீது குடியாத்தம் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
அந்த புகாரின் அடிப்படையில், குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமச்சந்திரன் மேற்பார்வையில் நகர காவல் ஆய்வாளர் பார்த்தசாரதி தலைமையிலான போலீசார் குடியாத்தம் அரசு மருத்துவமனைக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர். ஆனால், அப்போது மருத்துவர் கைது செய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது. அதனால், கடந்த செப்.4ஆம் தேதி ஜனநாயக மாதர் சங்கத்தினர் மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.