தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஈடிவி பாரத் செய்தி எதிரொலி; 2 மாதங்களாக தடைபட்ட போக்குவரத்து.. மீண்டும் அரசுப் பேருந்து இயக்கத்தால் மக்கள் மகிழ்ச்சி! - Makkampalayam Bus Service

ETV Bharat News Impact: ஈரோடில் உள்ள மாக்கம்பாளையம் மலைக்கிராமத்தில் மழையால் மண் பாதை மூடியதால் அரசு பேருந்து இயக்கம் தடைபட்டது குறித்து கடந்த மாதம் 27ஆம் தேதி அன்று ஈடிவி பாரத்தில் செய்தியாக வெளியானதன் எதிரொலியா கடம்பூரில் இருந்து மாக்கம்பாளையத்துக்கு மீண்டும் அரசு பேருந்து இயக்கப்பட்டுள்ளது.

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 4, 2024, 7:29 PM IST

உயர்மட்ட பாலம் கட்டுமான பணி
உயர்மட்ட பாலம் கட்டுமான பணி (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் உள்ள மாக்கம்பாளையம் என்ற மலைக்கிராமம் அடர்ந்த வனப்பகுதியில் உள்ளது. இந்த வனப்பகுதியை விட்டு வெளியேற வேண்டும் என்றால், இடையில் ஓடும் குரும்பூர் மற்றும் சர்க்கரைபள்ளம் ஆகிய இரு காட்டாறுகளை கடந்தால் தான் கடம்பூர் பகுதியை வந்தடைய முடியும்.

ஈடிவி பாரத் செய்தி எதிரொலியால் மீண்டும் அரசுப் பேருந்து சேவை (Credits - ETV Bharat Tamil Nadu)

எனவே, மாக்கம்பாளையம் முதல் கடம்பூர் வரை செல்லும் அரசுப் பேருந்து சேவை தினந்தோறும் காலை, மதியம், மாலை என மூன்று முறை இயக்கப்பட்டு வந்தது. அந்த பாதையும் பள்ளங்கள் நிரம்பிய மண்பாதையாக இருப்பதால், மழைக் காலங்களில் பள்ளங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் அபாயம் உள்ளது. இதனால் அப்பகுதியில் இயக்கப்படும் அரசுப் பேருந்து சேவை முன்னெச்சரிக்கையாக நிறுத்தப்படுவது வழக்கமாக உள்ளது.

இந்த நிலையில், குரும்பூர் மற்றும் சர்க்கரைப்பள்ளம் காட்டாறுகளின் குறுக்கே உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும் என்ற அப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று, 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஊரக உள்ளாட்சித்துறை சார்பில் ரூ.7 கோடி செலவில் இரு உயர்மட்ட பாலம் கட்ட அனுமதி வழங்கப்பட்டது.

அடர்ந்த வனப்பகுதியில் இருப்பதால் மத்திய அரசின் வனத்துறையிடம் தடையின்மை சான்றிதழ் பெற்று 2023ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் உயர்மட்ட பாலம் கட்டுமான பணி தொடங்கப்பட்டு, தற்போது வரை நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே,கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த தொடர் மழை காரணமாக குரும்பூர் மற்றும் சர்க்கரைப்பள்ளத்தில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் சர்க்கரைப்பள்ளத்தைக் கடந்து செல்ல பயன்படுத்தப்பட்ட மண்பாதை வெள்ளத்தால் மூடப்பட்டு, அரசுப் பேருந்து சேவையும் நிறுத்தப்பட்டது.

இதன் காரணமாக, மாக்கம்பாளையம் மலைக்கிராமத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள், கடம்பூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிக்குச் செல்ல போக்குவரத்து இன்றி பெரும் அவதிக்குள்ளாகினர். இத்தகைய சூழலில், பள்ளி மாணவர்களும், பொதுமக்களும் டெம்போவில் சென்று வருவதை வழக்கமாக்கிக் கொண்டனர்.

இந்த டெம்போவில் பொதுமக்களும் அதிகளவில் பயணிப்பதால் தினந்தோறும் மாணவர்கள் டெம்போ மேற்கூரையில் தொங்கியபடி 5 கி.மீ பயணித்து சர்க்கரைப்பள்ளத்திற்கு வரவேண்டியுள்ளது. மேலும், அங்கிருந்து கடம்பூர் மேல்நிலைப்பள்ளிக்குச் செல்லும் அரசுப் பேருந்தை நேரத்திற்கு பிடித்தால் மட்டுமே பள்ளிக்குச் செல்ல முடியும் என்ற நிலையில் பரிதவித்தனர்.

இதனை அடுத்து, மாக்கம்பாளையத்தில் இருந்து கடம்பூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிக்கு மாணவ, மாணவியர்கள் டெம்போவில் தொங்கியபடி பயணிக்கும் அவல நிலையையும், அதற்கு தீர்வாக மாற்றுப்பாதையை அமைத்து பேருந்து இயக்க வேண்டும் என்றும் கடந்த மாதம் 27ஆம் தேதி அன்று ஈடிவி பாரத்தில் செய்தியாக வெளியானது.

இந்த நிலையில், சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் கே.சி.பி.இளங்கோ, பாலம் கட்டிமுடியும் வரை பேருந்து இயங்கும் வகையில் தற்காலிக மாற்றுப் பாதை ஒன்றை அமைத்து நடவடிக்கை எடுத்தார். இதன் காரணமாக, கடம்பூரில் இருந்து மாக்கம்பாளையத்திற்கு இரு தினங்களாக அரசு பேருந்து சென்று வருகிறது.

இதற்கிடையே, மாக்கம்பாளையம் இடையே கட்டப்பட்டு வரும் உயர்மட்ட பால கட்டுமான பணிகளை துரிதப்படுத்த குரும்பூர், சர்க்கரைப்பள்ளத்தை சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் கே.சி.பி.இளங்கோ பார்வையிட்டார்.

அதனைத் தொடர்ந்து, கடம்பூரில் இருந்து மாக்கம்பாளையத்திற்கு சென்ற அரசு பேருந்துக்கு மக்கள் வரவேற்பு அளித்தனர். ரூ.7 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் புதிய உயர்மட்ட பாலம் விரைவில் கட்டிமுடிக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டிற்கு வரும் என்று தலைவர் கே.சி.பி.இளங்கோ தெரிவித்துள்ளார். கடந்த 2 மாதங்களாக பேருந்து வசதி இல்லாத நிலையில், ஈடிவி பாரத் செய்தியால் பேருந்து வசதி கிடைத்ததை அடுத்து, மக்கள் அனைவரும் நன்றி தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:இலங்கை அரசை கண்டித்து பாம்பன் மீனவர்கள் 2வது நாளாக போராட்டம்!

ABOUT THE AUTHOR

...view details