சென்னை:சென்னை ஐஐடி 3-வது ஆண்டு காசி தமிழ் சங்கமம் நிகழ்வுக்கு தயாராகி வருகிறது. தமிழ்நாட்டுக்கும், வாரணாசிக்கும் இடையேயான தொடர்பை வலுப்படுத்தும் வகையில் பிப்ரவரி 15ஆம் தேதி முதல் பிப்ரவரி 24ஆம் தேதி வரை காசி தமிழ் சங்கமம் நடைபெறுகிறது.
இந்நிலையில் தரமணியில் உள்ள ஐ.ஐ.டி. ஆராய்ச்சி பூங்காவில் காசி தமிழ் சங்கமம் 3.0 தொடர்பான நிகழ்ச்சி நடைபெற்றது. அதில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமை வகித்தார். இந்நிகழ்வில், 3-வது ஆண்டாக நடைபெறும் காசி தமிழ் சங்கமம் தொடர்பான காணொளி ஒளிபரப்பு செய்யப்பட்டது.
காசி என்பது மினி இந்தியா:
அதனைத் தொடர்ந்து பேசிய ஆளுநர், "காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு இதுவரை 21,000 விண்ணப்பங்கள் வந்துள்ளது. இதில் 1,200 பேரை தேர்வு செய்வது மிகவும் கடினமான விஷயம். தமிழகத்திலிருந்து செல்லும் தமிழர்களுக்கு காசியில் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. காசி, அயோத்தியா, பிரக்யாராஜ் உள்ளிட்ட இடங்களுக்கு காசி தமிழ் சங்கமத்தில் கலந்து கொள்ளும் நபர்கள் அழைத்து செல்லப்பட உள்ளார்கள்.
காசியும், தமிழ்நாடும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நெருக்கமாக இருந்ததை நினைவு கூறும் விதமாக காசி தமிழ் சங்கமம் நடந்து வருகிறது. ஒரே பாரதம், உன்னத பாரதம் என்பதன் அடிப்படையில் காசி தமிழ் சங்கமம் நடத்தப்படுகிறது. காசி என்பது மினி இந்தியா. இந்தியா முழுவதும் இருந்து ஒரு நாளைக்கு 3 லட்சத்துக்கும் அதிகமான நபர்கள் காசிக்கு வருகிறார்கள்.
மகாத்மா காந்தி, ரகுபதி ராஜாராம் என மகாவிஷ்ணுவை மையப்படுத்தி தான் கூறினார். ஆனால் இப்போது இறைவன் பெயரை சொல்லி வழிபட வெட்கப்பபடுகிறார்கள். மகா கும்பமேளா உத்தரபிரதேச அரசால் நடைபெறவில்லை, மத்திய அரசால் நடைபெறுகிறது. அது சிறப்பாக நடைபெற உத்தரபிரதேச அரசு ஒருங்கிணைத்து வழிநடத்தி செல்கிறது.
இந்தியா சனாதன தேசம்:
கை, கால், கண், காது என உறுப்புகள் பிரிந்தால் உடல் முழுமை அடையாது அதுபோல மாநிலங்கள் பிரிந்தால் பாரதம் ஒன்றிணைய முடியாது. மாநிலங்கள் அனைத்தும் இணைந்தது தான் இந்தியா அதுதான் பாரதம். விரைவில் உலக அளவில் மூன்றாவது பொருளாதார நாடாக இந்தியா வளர்ச்சி அடைய உள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு ஆட்சி அமைந்த பிறகு பாரதம் சிறப்பான வழியில் வெற்றியை நோக்கி பயணித்து வருகிறது.
பாரதத்தை இணைப்பதில் காசி தமிழ் சங்கமம் நிகழ்வு மிக முக்கிய பங்காற்றும். பல ஆயிரம் ஆண்டுகளாக காசிக்கும், தமிழ்நாட்டிற்கும் இடையே தொடர்புகள் உள்ளது. இன்னும் ஆயிரம் ஆண்டுகள் கடந்தாலும் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி பழமை மாறாமல் தொடர்ந்து நடைபெறும். இந்தியா சனாதன தேசம் என்பதற்கு காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி சிறந்த எடுத்துக்காட்டு" என்றார்.
ஐந்து குழுவாக 1000 பேர் பங்கேற்பு:
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி, "காசி தமிழ் சங்கமம் 3-வது ஆண்டாக வருகிற பிப்ரவரி 15ஆம் தேதி முதல் பிப்ரவரி 24ஆம் தேதி வரை நடைபெறுகிறது. தமிழ்நாட்டுக்கு - காசிக்கும் இடையேயான தொடர்பை வலுப்படுத்தும் நோக்கில் இந்த தமிழ் சங்கமும் நடைபெறுகிறது. வெறும் ஆன்மீகம் மட்டுமல்லாது பல்வேறு தொடர்புகள் உள்ளது. 'ஒரே பாரதம் உன்னத பாரதம்' என்ற தலைப்பின் அடிப்படையில் இங்குள்ள மக்கள் காசியை பற்றி தெரிந்து கொள்ள வசதியாக இந்நிகழ்வு நடத்தப்படுகிறது.
அந்த வகையில், இந்தாண்டு மகா கும்பமேளா பிரயாக்ராஜ்ஜில் நடைபெறுகிறது. வழக்கமாக நவம்பர் டிசம்பர் மாதத்தில் நடைபெறும் நிகழ்வு கும்பமேளாவை ஒட்டி இந்த ஆண்டு ஜனவரியில் நடத்தப்படுகிறது. வாரணாசியில் உள்ள நமோ காட்டில் கலாச்சார நிகழ்வுகள் நடைபெறுகிறது. மாணவர்கள் ஆசிரியர்கள் உழவர்கள் உள்ளிட்ட பலதரப்பட்டு மக்கள் பிரித்து அனுப்பப்படுகிறார்கள்.
இந்த முறை பெண்களுக்காக தனிக்குழு இங்கிருந்து செல்கிறது. தமிழ்நாட்டில் இருந்து 5 குழுக்களாக பிரிக்கப்பட்டு, சம எண்ணிக்கையில் மொத்தம் ஆயிரம் பேர் பங்கேற்க உள்ளனர். மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் பயிலும் தமிழக மாணவர்களும் இந்த நிகழ்வில் கலந்து கொள்கிறார்கள்.
இதையும் படிங்க:காசி தமிழ் சங்கமம் 2025: ஏற்பாடுகள் தீவிரம் - விண்ணப்பிப்பது எப்படி?
முக்கிய கருப்பொருள்:
தமிழ்நாட்டில் சார்பில் பங்கேற்கும் நபர்கள் தமிழ் கவி சுப்பிரமணிய பாரதியாரின் பழங்காலத்து இல்லம், கேதார் காட், காசி மண்டபம் ஆகியவற்றை பார்வையிடதுடன், பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்திற்கு வருகை தந்து தமிழ் துறையில் கல்வி இலக்கியம் தொடர்பாக கலந்துரையாட உள்ளனர். அகத்தியரின் பங்களிப்பு சித்த மருத்துவத்திற்கு ஈடு இணையற்றது. சித்த மருத்துவ முறை பாரம்பரிய தமிழ் இலக்கியம் தேசத்தின் கலாச்சார ஒற்றுமைக்கு அகத்தியர் ஆற்றிய குறிப்பிடத்தக்க பங்களிப்பு ஆகியவற்றை எடுத்துக்காட்டுவது தான் இந்த ஆண்டுக்கான முக்கிய கருப்பொருள்.
மொத்த செலவை மத்திய அரசே ஏற்கும்:
சென்னையிலிருந்து ஐந்து ரயில்கள் மூலம் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உத்தரப்பிரதேசம் செல்கிறார்கள். அயோத்தி ராமர் கோயில், வாரணாசி கோயில், கும்பமேளா நிகழ்வில் கலந்து கொள்கிறார்கள். அயோத்தி ராமர் கோயில், வாரணாசி கோயில், கும்பமேளா நிகழ்வில் கலந்து கொள்கிறார்கள். http://kashitamil.iitm.ac.in. என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.
காசி தமிழ் சங்கத்திற்கு செல்வதற்கு ஒரு நபருக்கு 30 ஆயிரம் ரூபாய் செலவாகும். ஆனால் முழு செலவை மத்திய கல்வி துறை அமைச்சகம் ஏற்றுக் கொள்கிறது. இதில் ஆன்லைனில் முன் பதிவு செய்பவர்கள் முன்பணமாக ரூ.1500 செலுத்த வேண்டும். அவர்களின் பயணம் உறுதி செய்த பின்னர் ரயிலில் பயணி ஏறிய பிறகு முன் பணம் திருப்பி கொடுக்கப்படும். பயணம் உறுதி செய்யாதபட்சத்தில் பணம் திருப்பி கொடுக்கப்படமாட்டது" எனத் தெரிவித்தார்.