திருநெல்வேலி : மகாகவி பாரதியார் பிறந்தநாள் ஆண்டுதோறும் டிச 11ம் தேதி அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், இந்த ஆண்டும் பாரதியாரின் 143வது பிறந்தநாள் இன்று வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
பிரதமர் மோடி இல்லத்தில் பாரதி பிறந்தநாள் : பாரதியாரின் பிறந்தநாளை முன்னிட்டு, மகாகவி பாரதியின் முழுமையான படைப்புகளின் 23 தொகுதிகள் கால வரிசைப்படி, பாரதி அறிஞர் சீனி விசுவநாதனால் ( 86) தொகுக்கப்பட்டு புத்தகமாக அல்லயன்ஸ் பதிப்பகம் வெளியிடுகிறது. இப்புத்தகம் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்கங்களைக் கொண்டதாகும். கடந்த 64 ஆண்டுகளாக திரட்டி சீனி விசுவநாதன் தொகுத்துள்ளார்.
இந்த புத்தகத்தை பிரதமர் மோடி இன்று தனது இல்ல நிகழ்ச்சியில் வெளியிட்டுள்ளார். இதில், மகாகவி பாரதியின் எழுத்துக்களின் பதிப்புகள், விளக்கங்கள், ஆவணங்கள், பின்னணி தகவல்கள் மற்றும் தத்துவ விளக்கங்கள் போன்றவை அடங்கும். இப்புத்தகத்தை பிரதமர் மோடி வெளியிட சீனி விசுவநாதன் பெற்றுக்கொண்டார்.
பல்லக்கு தூக்கிய ஆளுநர் ஆர்.என்.ரவி : மகாகவி சுப்பிரமணிய பாரதியின் பற்றாளர்கள் மற்றும் வழிவந்தவர்களுடன் சேர்ந்து மகாகவியின் 143வது பிறந்த நாளையொட்டி அவரது உருவப் படத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அதன்பின்னர் பாரதியாரின் தீவிர பற்றாளர்களுடன் சேர்ந்து பாரதியின் ’ஜதி பல்லக்கு’ தூக்கி ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். இந்த ஜதி பல்லக்கு, மகாகவி பாரதியாரின் நினைவு இல்லத்துக்குச் சென்றதும் அவருக்கு மரியாதை செலுத்தப்படும்.
மகாகவி சுப்பிரமணிய பாரதி வாழ்ந்த திருவல்லிக்கேணியில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க பாரதியார் நினைவு இல்லத்துக்குச் சென்ற ஆளுநர் ரவி, மகாகவிக்கு மலர் தூவி மரியாதை செலுத்தி, பார்வையாளர்களின் புத்தகத்தில் தனது கருத்துக்களை பதிவு செய்தார்.
ஒவ்வொரு ஆண்டும் மகாகவி பாரதியின் பிறந்தநாளன்று ஜதி பல்லக்கு தூக்கப்படுகிறது. நம்மில் எத்தனை பேருக்கு ஜதி பல்லக்கு என்றால் என்ன? அதன் பின்னணி என்ன? என்பது தெரியும். இதைப்பற்றி தெரிந்து கொள்வே பாரதியின் எள்ளுப் பேரனும், பாடலாசியரியருமான நிரஞ்சன் பாரதியை ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகம் சார்பில் தொலைபேசி மூலம் தொடர்புக்கொண்டு பேசினோம்.
ஜதி பல்லக்கு பின்னணி : அப்போது அவர் கூறியதாவது, "பாரதியார் கடந்த 1919ம் ஆண்டு எட்டயபுரம் ஜமீன்தாருக்கு சீட்டுக்கவி (கவிதை வடிவிலான கடிதம்) அனுப்புகிறார். என்னை நீ வரவேற்க வேண்டும். எனது கவித்திறமையை மதித்து அங்கீகரிக்கும் விதமாக என்னை பல்லக்கில் தூக்கிட்டு வந்து வரவேற்பு அளித்து உபசரிக்க வேண்டும். எனக்கு சால்வை அணிவித்து, பொற்கிழி கொடுத்து பரிவாரத்துடன் வரவேற்பு அளித்து கொண்டாட வேண்டுமென எட்டையபுரம் மன்னருக்கு கடிதம் எழுதுகிறார்.
ஆனால் இந்த கடிதத்திற்கு பாரதியாருக்கு பதில் கிடைக்கவில்லை. எட்டயபுரம் மன்னர் அப்போது ஆட்சியில் இருந்த பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு பயந்து, பாரதியாரை ஆதரித்தால் நமக்கு பிரச்னை ஏற்பட்டு விடும் என எண்ணி அக்கடிதத்திற்கு பதில் அனுப்பவில்லை. பாரதியாரின் ஏக்கம் நிறைவேறாமல் போய்விடுகிறது. அதன்பின் அவர் 1921ல் இறந்து விடுகிறார்.
இந்த நிறைவேறாத கனவை நிறைவேற்ற வேண்டுமென எண்ணி, சென்னையில் உள்ள வானவில் பண்பாட்டு மையம் என்ற அமைப்பின் தலைவர் ரவி ( வழக்கறிஞர்) பாரதியாரின் இந்த கனவை நிறைவேற்றும் விதமாக ஆண்டுதோறும் பாரதியாரின் பிறந்தநாளன்று ’ஜதி பல்லக்கு’ என்ற பெயரில் பாரதியாரின் சிலையை பல்லக்கில் வைத்து தூக்குவோம் என கூறி கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஜதி பல்லக்கு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பாரதியாரின் வீட்டிற்கு எதிரே உள்ள பார்த்தசாரதி கோயில் பல்லக்கு செய்து, அந்த பல்லக்கில் பாரதியின் மார்பளவு சிலையை வைத்து பாரதியின் அன்பர்கள், தமிழ்க் கவிஞர்கள், பெரிய ஆளுமைகள் எல்லாதுறையில் இருந்து வரும் பாரதியின் அன்பர்கள் அந்த பல்லக்கை தோளில் சுமந்து கொண்டு ஊர்வலமாக செல்வர். இது தான் ஜதி பல்லக்கின் வரலாறு. நானும் இந்த நிகழ்ச்சியில் ஆண்டுதோறும் தவறாமல் கலந்து கொண்டு வருகிறேன்" என தெரிவித்தார்.
இதையும் படிங்க :ஓசூரில் மார்கதர்சி சிட் ஃபண்டின் 120வது கிளை! நிறுவன நிர்வாக இயக்குநர் சைலஜா கிரோன் திறந்து வைத்தார்
மாணவ, மாணவிகள் உறுதிமொழி :திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையம் பகுதியில் அமைந்துள்ள ம.தி.தா.இந்து கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் மகாகவி சுப்ரமணிய பாரதியார் தனது பள்ளி படிப்பை படித்தார். அவர் படித்த வகுப்பறை இன்றளவும் நாற்றங்கால் என்ற பெயருடன் பராமரிக்கப்பட்டு வருகிறது.
பெண்ணுரிமைக்காக குரல் கொடுத்த பாரதியின் வரிகள் பெண்கள் மத்தியில் தொடர்ந்து இருக்க வேண்டும் என்ற அடிப்படையில், பாரதி படித்த வகுப்பறையை மாணவிகள் மட்டும் படிக்கும் வகுப்பறையாக மாற்றி பள்ளி நிர்வாகத்தின் மூலம் பராமரிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் மகாகவி பாரதியாரின் 143வது பிறந்தநாளை ஒட்டி பாரதி படித்த வகுப்பறையில் அமைந்திருக்கும் சிலைக்கு பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து மாணவிகள் பாரதியின் பாடல் பாடி கவி அஞ்சலி செலுத்தியதுடன் தேசிய ஒருமைப்பாட்டு உறுதி மொழியும் எடுத்துக் கொண்டனர்.
முதல்வர் மலர் தூவி மரியாதை : பாரதியின் பிறந்தநாளான இன்று ( டிச 11) காலை 10 மணியளவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை கடற்கரை காமராசர் சாலையில் உள்ள பாரதியார் சிலைக்கு மாலை அணிவித்து, மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார். முதலமைச்சரை தொடர்ந்து அமைச்சர்களும் மலர்கள் தூவி மரியாதை செலுத்தினர்.
தமிழக அரசு :தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மகாகவி பாரதியாரின் நினைவுகளைப் போற்றும் வகையில், அவர் மறைந்த நூற்றாண்டின் நினைவாக செப் 11ம் நாள் ஆண்டுதோறும் மகாகவி நாள் – என கடைபிடிக்கப்படும் என 10.9.2021 அன்று அறிவித்து நடைமுறைப்படுத்தினார்.