சென்னை:கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து இதுவரையில் 67 பேர் மரணம் அடைந்துள்ளனர். 100க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. பல்வேறு கட்சியினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.
இதனால் கள்ளச்சாராயத்தை ஒழிக்கும் விதமாக கடந்த ஜூன் 29ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடரில், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் முத்துச்சாமி, மதுவிலக்கு சட்டத் திருத்தம் மசோதாவை தாக்கல் செய்திருந்தார். சட்டப்பேரவையில் அந்த மசோதாவுக்கு ஒருமனதாக அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டிருந்தது. இந்நிலையில், கள்ளச்சாராயத்தை ஒழிக்கும் வகையில் கொண்டுவரப்பட்ட மதுவிலக்கு அமலாக்க திருத்தச் சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.
சட்டத்திருத்த மசோதாவின் விவரங்கள்: கள்ளச்சாராயத்தை முற்றிலுமாக ஒழிக்கும் வகையில் அதை தயாரிப்பது, விற்பனை செய்பவர்களுக்கு ஆயுள் வரை கடுங்காவல் தண்டனையோடு, ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கும் வகையில் மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது.
தற்போதுள்ள 1937ஆம் ஆண்டு தமிழ்நாடு மதுவிலக்குச் சட்டத்தின் படி, விதிகளை மீறி மதுவினை இறக்குமதி செய்வது, ஏற்றுமதி, அருந்துதல் குற்றங்களுக்கு தண்டனைகள் வழங்கப்படுகிறது. மனித உயிருக்கு கேடு விளைக்க வைக்கக்கூடிய கள்ளச்சாராயத்தை தயாரித்தல், உடைமையில் வைத்திருத்தல், விற்பனை செய்வது போன்று வழக்கமாக ஈடுபடும் குற்றங்களுக்கு வழங்கப்படக் கூடிய தண்டனைகள் போதுமானதாக இல்லை என்று கருதி இச்சட்டத்திருத்தம் கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.