தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"கல்வி மாநில கட்டுப்பாட்டில் கிடையாது" - ஆளுநர் ஆர்.என்.ரவி ! - GOVERNOR RN RAVI

புதிய கல்விக் கொள்கை மாணவர்களின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

ஆளுநர் ஆர்.என்.ரவி
ஆளுநர் ஆர்.என்.ரவி (@rajbhavan_tn)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 10, 2025, 8:52 PM IST

வேலூர்:2024-25 ஆம் ஆண்டுக்கான ஏஐயு தெற்கு மண்டல துணைவேந்தர்கள் மாநாடு காட்பாடியில் உள்ள வி.ஐ.டி.பல்கலைக்கழகத்தில் இன்று (ஜனவரி 10) நடைபெற்றுள்ளது. இதில், சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டுள்ளார்.

நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, “வி.ஐ.டி பல்கலைக்கழகம் உயர்கல்வியில் சிறந்து வழங்குகிறது. இந்திய பல்கலைக்கழகங்களின் சங்கத்தில் 1,100 பல்கலைக்கழகங்கள் உறுப்பினர்களாக உள்ளன. இதில், இந்தியாவில் உள்ள பெரும்பான்மையான பல்கலைக்கழகங்கள் உறுப்பினர்களாக உள்ளன.

புதிய கல்விக் கொள்கை:

புதிய கல்விக் கொள்கை மாணவர்களின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும். நாம் கலாச்சாரத்தில் இருந்து மாறிக் கொண்டிருக்கிறோம். பல்கலைகழகங்கள் ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும். நாட்டின் வளர்ச்சிக்கு உயர் கல்வியில் மாற்றங்கள் கொண்டு வர வேண்டும். மாணவர்களுக்கு அறிவுத்திறனை மேம்படுத்தும் வகையில், கற்பித்தல் மற்றும் கற்றல் முறையில் மாற்றங்களை கொண்டுவர வேண்டும்.

நம் நாட்டின் வளர்ச்சிக்கு சிறுகுறு தொழில்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்தியாவில் குருகுல கல்வி பின்பற்றப்பட்டு வந்தது. அதன் மூலம் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் இடையில் நல்ல புரிதல் இருந்தது. அறிவுசார் சொத்து என்பது அறிவை தயாரிப்பாக மாற்றுவது. ஆனால், இந்தியா உலக சந்தையின் விநியோகிப்பாளராக இருந்தது.

இதையும் படிங்க:யார் கள்ளக்கூட்டணி...? பொங்கிய எதிர்க்கட்சி தலைவர்... முதல்வருடன் காரசார விவாதம்...!

கல்வி மாநில கட்டுப்பாட்டில் கிடையாது. தற்போதைய கல்வி முறை பாடங்களை மனப்பாடம் செய்து அதை தேர்வு எழுதும் முறையாக உள்ளது. இதன் மூலம் அறிவார்ந்த மாணவர்களை உருவாக்குவதற்கு பதில், மனப்பாடம் செய்யும் மாணவர்களையே உருவாக்குகிறோம். இந்தியா 400 சதவீத அறிவுசார் படைப்புகளை உருவாக்கியுள்ளது. சொத்துரிமை 46 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது சீனா மற்றும் அமெரிக்காவை ஒப்பிடுகையில் மிக அதிகம்.

நாம் கூட்டாட்சி முறையில் உள்ளோம். இந்தியா ஒருங்கிணைந்த நாடாகும். கற்பித்தல், கற்றல், புதிய கண்டுபிடிப்பு மற்றும் ஆராய்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அரசு பல்கலைக்கழகங்களில் இருந்து 6,500 ஆராய்ச்சி மாணவர்களை நாம் தயார் செய்துள்ளோம்” என்று ஆளுநர் ரவி கூறினார்.

தொடர்ந்து, நிகழ்ச்சியில் வி.ஐ.டி வேந்தர் ஜி.விசுவநாதன் பேசியதாவது, “விஐடி பல்கலைக்கழகம் 40வது ஆண்டை கொண்டாடி கொண்டிருக்கிறது. 180 மாணவர்களுடன் தொடங்கப்பட்ட விஐடியில், தற்போது 1 லட்சம் மாணவர்கள் 80 நாடுகளில் இருந்து வந்து கல்வி பயில்கின்றனர். கல்வி இருந்தால் தான் பொருளாதாரத்தில் முன்னேற முடியும். நாம் வளர்ந்து வரும் நாடு. எனவே, கல்வியை நாம் பாதுகாக்க வேண்டும். இந்தியாவில் 55 ஆயிரம் கல்லூரிகளும், 1,200 பல்கலைக்கழகங்களும் உள்ளன. இருந்தாலும், ஆராய்ச்சியில் நாம் பின்தங்கியுள்ளோம்.

விஐடி வேலூர் வளாகத்தில் 44 ஆயிரம் மாணவர்கள் படிக்கின்றனர். இதில், 4 ஆயிரம் மாணவர்கள் ஆராய்ச்சி படிப்பு படிக்கின்றனர். அவர்களுக்கு அரசு உதவி இல்லாமல், நாங்கள் மாத உதவித்தொகையை வழங்கி வருகிறோம். மத்திய, மாநில அரசுகளின் கல்வி உதவித்தொகையை 600 மாணவர்கள் பெறுகின்றனர். அதிகமாக கல்விக்கு செலவழித்தால் இந்தியா வளரும்” என்று விசுவநாதன் பேசினார்.

ABOUT THE AUTHOR

...view details